Federal government ordered to respond to maternity pay request

Advertisment

பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால பணப்பயன்களை குறைத்துப் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய மனுவிற்கு மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1961ம் ஆண்டு மகப்பேறு பயன் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி, பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் முழு ஊதியம், பணபயனாக வழங்க வகை செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு இந்த சட்டத்தில் புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில், அகவிலைப்படி, வீட்டு வாடகை படி, ஊக்கத் தொகை ஆகியவற்றைக் கழித்துவிட்டு குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே பணப் பலனாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி அகில இந்திய பணிபுரியும் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வகிதா பர்வின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இதுவரை 100 சதவிகித ஊதியம், மகப்பேறு பயனாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதைக் கடுமையாகக் குறைத்துள்ளதால் பெண்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டுமென மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்தது.