ADVERTISEMENT

குண்டர் சட்ட கைதுக்காக ரூ.500 கோடி நஷ்டஈடு கோரும் பைனான்சியர்!- சென்னை காவல்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு!

10:12 AM Jan 12, 2020 | santhoshb@nakk…

சட்டத்தையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதால் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கோரி பைனான்சியர் ககன் போத்திரா தொடர்ந்த மனுவிற்குப் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை சவுகார்பேட்டை, மின்ட் தெருவைச் சேர்ந்த ககன் போத்ரா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், எனது தந்தை முகுந்த்சந்த் போத்ரா பிரபல சினிமா பைனான்சியர் மற்றும் வைர மதிப்பீட்டாளர் ஆவார். சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறையினர் மற்றும் தொழிலதிபர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார்.

ADVERTISEMENT

தி.நகரைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமார் கணபதி உள்ளிட்ட 4 பேர் எனக்கும் எனது தந்தைக்கும் எதிராகக் காவல்துறையில் புகார் அளித்தனர். கொடுத்த பணத்திற்கு அவர்களின் ஓட்டலை மிரட்டி எழுதி வாங்க நினைப்பதாக அந்தப் புகாரில் தெரிவித்திருந்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் எந்தவிதமான விசாரணையும் செய்யாமல், விதிகளுக்குப் புறம்பாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து, பல சிவில் புகார்களைப் பெற்ற காவல்துறை என்னையும், எனது தந்தையையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஏற்கனவே, எனக்கும் எனது தந்தைக்கும் எதிராகப் புகார் அளித்தவருக்கு எதிராக சிவில் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. சிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எனக்கும் எனது தந்தைக்கும் எதிரான புகாரின் பேரில் கைது செய்து, பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


பின்னர் குண்டர் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதனை ரத்து செய்து உத்தரவிட்டது. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் முன்னர் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் சட்டத்திற்கு எதிராக, அதிகார பலத்தில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதனால் எனது நற்பெயருக்கும், தொழிலுக்கும் பெரும் பாதிப்பு எற்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் மூலமாக குண்டர் சட்டத்தில் கைது செய்ததால் எனக்கு திருமணத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.


எனவே சட்டத்திற்கு எதிராக, அதிகார பலத்தில் என்னையும் எனது தந்தையையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் தமிழக அரசு எனக்கு ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 5- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT