/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ch3_63.jpg)
நீதிமன்ற உத்தரவுகளைத் துச்சமாக நினைத்துப் புறக்கணிக்கும், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் பதவியைப் பறிக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1998- ஆம் ஆண்டு தாம்பரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய பழனி, எவ்வித டெண்டரும் கோராமல், 83,920 ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளை மேற்கொண்டதாக, அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுகளை விசாரித்த அதிகாரி, குற்றச்சாட்டுகள் நிருபணம் ஆகவில்லை என அறிக்கை அளிக்கிறார்.ஆனால், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர், அந்த அறிக்கையை ஏற்க மறுத்ததுடன், துறை ரீதியான விசாரணையை நிலுவையில் வைத்து, 2001- ஆம் ஆண்டு, அவர் பணி ஓய்வு பெற அனுமதித்தார்.
பின்னர், 2005- ஆம் ஆண்டு தேவையில்லாமல், அவசியமில்லாமல்,அவசரப் பணிகளை மேற்கொள்வதற்கான சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி, 83,920 ரூபாய் மதிப்பிலான பணிகளை மேற்கொண்டதற்காக, அவருடைய ஓய்வூதியத்தில் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் வீதம் பிடித்தம் செய்யும் வகையில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, பழனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, அனைத்து விதிகளையும் பின்பற்றியே தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அதில் எந்த விதிமீறலும் இல்லை எனவும் தெரிவித்திருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘குற்றச்சாட்டு குறிப்பாணையில் இடிபாடுகளை அகற்ற லாரி அமர்த்தியது, தெரு விளக்குகளுக்கு பியூஸ் கேரியர் வாங்கியது, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மின் மோட்டார் வாங்கியது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதற்காக, மனுதாரருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இது அவசரகாலப் பணிகள் இல்லை எனக் கூறமுடியாது. அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில், ஒரு லட்சத்திற்கும் குறைவான தொகையையேப் பயன்படுத்தி இருக்கிறார். அதனால் பழனிக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
விதிமீறல் கட்டிடங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை எதிர்த்து அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது, குறித்த காலத்திற்குள் முடிவெடுக்க, உயர்நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்தபோதும், அதை அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை. நீதிமன்ற உத்தரவுகளைத் துச்சமாக நினைக்கும் அதிகாரிகளின் ஐ.ஏ.எஸ். பதவியைப் பறிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவிற்கு கீழ்படியாமல் இருப்பது கடமையிலிருந்து தவறுவதற்குச் சமமானது. நகராட்சி ஆணையராக இருந்த மனுதாரர் பழனி, தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு, தன் கடமையைச் செய்ததற்காகத் தண்டித்திருக்கக் கூடாது.’எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)