ADVERTISEMENT

கரோனா சிகிச்சை முடிந்து பணியில் சேர்ந்த முதல் காவலர் -காவல் துறை ஆணையாளர் வாழ்த்து கூறி வரவேற்பு 

04:40 PM May 18, 2020 | rajavel


சென்னை காவல் துறையில் கரோனா தொற்று உறுதியான முதல் காவலர் சிகிச்சை முடிந்து பணியில் சேர்ந்தார். காவல் துறை ஆணையாளர் விசுவநாதன் தலைமையில் காவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வரவேற்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்து உதவி ஆய்வாளர் அருணாச்சலம் ரோந்து பணியில் இருந்து வந்தார். இவருக்கு கடந்த மாதம் சோதனை செய்தபோது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையில் 14 நாள் சிகிச்சை மற்றும் வீட்டில் 14 நாள் தனிமைப்படுத்திகொண்டு சிகிச்சை முடிந்து இன்று பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்த அருணாச்சலத்திற்கு காவல்துறை ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறினார்.

அப்போது செய்தியாளர்களிடம் உதவி ஆய்வாளர் அருணாச்சலம் கூறியதாவது, கடந்த மாதம் பணியில் இருந்தபோது உயரதிகாரிகளின் ஆலோசனைப்படி கரோனா பரிசோதனை செய்தோம். எனக்கு கரோனா உறுதியான பின்பு உயரதிகாரிகள் என்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற ஆலோசனை கூறினர்.


நான் மருத்துவமனையில் இருந்தவரை அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் சிறப்பான பணியை மேற்கொண்டனர். மேலும் நான் குணமடைந்ததற்கு மிக முக்கிய காரணம், காவல் துறை உயரதிகாரிகள் முதல் என்னுடன் பணியாற்றும் காவலர்கள் வரை அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்து, என்மீது அக்கறை எடுத்து நம்பிக்கை அளித்ததுதான். அவர்களின் ஒத்துழைப்பிலேயே எனக்கு பாதி நோய் குணமாகியது.

14 நாள் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய பின்னர் என் மீது மட்டுமில்லாமல் என் குடும்பத்தினர் குறித்தும் அதிகாரிகள் விசாரித்தது மகிழ்ச்சியளித்தது. 28 நாள் முழுமையான சிகிச்சைக்குபின் 3 முறை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் நெகடிவ் வந்ததால் தற்போது பணியில் சேர்ந்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.




காவல் துறை ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சென்னையில் முதல் தொற்று பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து பணியில் சேரும் உதவி ஆய்வாளருக்கு காவல் துறை சார்பில் பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மற்ற காவலர்களும் நலமுடன் வீடு திரும்பி மக்கள் பணிக்கு வரவேண்டும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

கரோனா பாதித்த காவலர்கள் மீது உடனடியாக அக்கறை செலுத்திய தமிழக முதல்வர், சுகாதார துறை அமைச்சர், அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தற்போது வரை 190 காவலர்கள் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் ‘ஏ’ அறிகுறியுடன் இருப்பதால் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT