ADVERTISEMENT

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!!!

04:33 PM Jun 03, 2020 | rajavel

ADVERTISEMENT

சென்னை எக்மோரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 9 மணி அளவில் செல்போன் எண்ணில் இருந்து அவசர தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு ஒரு மர்ம நபர் பேசினார். அந்த நபர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

ADVERTISEMENT


உடனே காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் பதட்டமடைந்தனர். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் வீடு, தலைமை செயலகம் ஆகிய இரண்டு இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் கடும் சோதனை செய்தனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தியும் எந்தவிதமான வெடிகுண்டுகளும் கைப்பற்றப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அந்த செல்போன் எண் யாருடையது, அதிலிருந்து யார் பேசியது என்பதை கண்டுபிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொண்டனர் போலீசார். அதில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள கூனிமேடு குப்பம் பகுதியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்தது.


இதையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் போனது. மரக்காணம் போலீசார் கூனிமேடு குப்பம் பகுதிக்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் புண்ணியமூர்த்தி என்பவரின் மகன் புவனேஷ் (வயது 23) என தெரிய வந்தது. இவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.

அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவர் மனவளர்ச்சி குன்றியவர் என்பதும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருவதும் தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

இவர் கடந்த ஆண்டு இதேபோன்று கோயம்பேடு மற்றும் விழுப்புரம் பஸ் நிலையம், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடி ஆகியோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT