youth incident police investigation villupuram district

விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 23). இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண்ணின் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (31/12/2021) அந்தப் பெண்ணும், வெற்றிவேலும் கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் ராமநாதசாமி கோவிலுக்குச் சென்று திடீர் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisment

அதையடுத்து, அவர்கள் இருவரும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி மனு அளித்தனர். இந்த நிலையில், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் இந்த திருமணம் குறித்து இரு குடும்பத்தினர் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்போது, அந்த பெண் வெற்றிவேலை உதறிவிட்டு தனது தாய், தந்தை தான் முக்கியம் எனக்கூறி, தனது தந்தையுடன் செல்வதாகக் கூறி சென்றுவிட்டார்.

Advertisment

இதனால் மனமுடைந்த வெற்றிவேல் தான்காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி தாய், தந்தை தான் முக்கியம் என்று சென்று விட்டாரே என்று மனமுடைந்து புத்தாண்டு தினமான நேற்று (01/01/2022) மதியம் 02.00 மணியளவில் தனது வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த வளவனூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெற்றிவேலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, வெற்றிவேல் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தில், "திருமணம் ஆன முதல் நாளே எனது காதல் மனைவியைப் பிரிந்ததால் மனம் உடைந்து போனேன். பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் மிரட்டினர். அதனால்தான் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடிப்படையாக கொண்டு வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.