ADVERTISEMENT

சர்வதேச அளவில் எட்டாவது இடத்தில் சென்னை விமான நிலையம்

10:12 AM Jan 03, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2021-ஆம் ஆண்டு நேரம் தவறாது செயல்பட்ட விமான நிலையங்களில் சர்வதேச அளவில் சென்னை விமான நிலையம் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கரோனா தொற்று விமான போக்குவரத்துத்துறையை உலகளவில் சென்ற ஆண்டு முடங்க வைத்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு தொற்று பாதிப்பு காரணமாக, 36% விமானங்கள் உலகளவில் ரத்து செய்யப்பட்டன. 2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் விமான போக்குவரத்துத்துறை சற்று ஏற்றம் காண ஆரம்பித்தது. அடுத்த அலைக்கான அச்சுறுத்தல் இருந்தபோதிலும், 2021-ஆம் ஆண்டில் 2 கோடியே 50 லட்சம் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 10% அதிகமாகும்.

வீழ்ச்சியடைந்துள்ள விமானத்துறையை மேம்படுத்துவதற்காக ஒரு வருடமாக விமான தரவு இணைய நிறுவனமான சிரியம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. விமானப் போக்குவரத்தில் காலதாமதம், விமான நிலையங்களின் செயல்பாடு, விமானத்திற்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு, உலகளவில் தரவு கணக்கெடுப்பு நடத்தியது.

அதில், 'காலம் தவறாது' என்னும் பிரிவில் சென்னை விமான நிலையம் தேர்வாகியுள்ளது. சென்னை விமான நிலையம் உலக அளவில் எட்டாவது 'நேரம் தவறாது' விமான நிலையமாக, விமான தரவு இணைய நிறுவனமான சிரியத்தின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் 89.32% சரியான நேரத்தில் புறப்படுவதாகவும், வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் இட்டாமி விமான நிலையம் 96.51%பெற்று முதலிடத்தில் உள்ளது.

முதல் நான்கு இடங்களில் ஜப்பான் நாட்டில் உள்ள விமான நிலையங்கள் இருக்கும் நிலையில், ஐந்தாவது இடத்தில் ரஷ்யாவின் ஷெரெமெட்டியோ விமான நிலையம் உள்ளது. உலக அளவில் பெரிய விமான நிலையங்கள் என்ற பட்டியலில் முதல் 30 இடத்தில் இந்தியாவில் சென்னை விமான நிலையம் மட்டுமே உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT