ADVERTISEMENT

‘பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிக்கை’ - தமிழக அரசு அனுமதி

11:00 PM Nov 15, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி, உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் துன்புறுத்தியதாகச் சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக முதலில் சார் ஆட்சியர் விசாரணை, பிறகு ஆட்சியர் விசாரணை என நடந்தது. அதன் பின்னர் அப்போதைய அரசு முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

அதே சமயம் பல்வீர் சிங் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆயுதத்தைப் பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளில் 4 வழக்குகள் பல்வீர்சிங் மீது பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆனால் பல்வீர்சிங் தொடர்பான வழக்குகளில் அனைத்து விசாரணைகள் முடிந்தும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இதனையடுத்து பல்வீர் சிங் மீதான குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்யகோரி அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், காவல் துறையினர் தன் மீது பொய் வழக்கு தாக்கல் செய்து காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட மனுதாரர், கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை வழங்க வேண்டும், விசாரணை அதிகாரி அமுதாவின் அறிக்கையை தன்னிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது. அப்போது விசாரணை அதிகாரி அமுதாவின் அறிக்கையை தங்களுக்கு வழங்க கோரி 3 மாதங்கள் ஆகியும், அரசு தரப்பில் இருந்து இதுவரை பதிலளிக்கவில்லை என மனுதாரர் தரப்பு வாதத்தை முன் வைத்தது. அப்போது அரசு தரப்பில், விசாரணை அதிகாரி அமுதாவின் அறிக்கையை மனுதாரருக்கு வழங்க கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்தார். மேலும் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது குற்ற நடவடிக்கை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT