'Palveer Singh's suspension revoked' - Tamil Nadu Govt

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், வழக்குகளில் விசாரணைக்காக வருபவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லைப் பிடுங்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது சிபிசிஐடி போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே சமயம் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 பேர் மீது இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி குற்றவியல் நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடைநீக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. சுமார் 10 மாதத்திற்கும் மேல் பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது இடை நீக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பிற்கேற்ப பல்வீர் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்கஉள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவால் பல்வீர் சிங் மீண்டும் பணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.