The action of Tamil Govt is commendable  High Court Madurai Branch

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாகூர் கனி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத்தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 2018 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தனது 4 சக்கர வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எனது வாகனம் போலீசாரால் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. இது குறித்து விசாரணை செய்யநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தேன். ஆனால் எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே எனது வாகனத்தை விடுவிக்க உத்தரவிட வேண்டும்” எனத்தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, “போதைப்பொருள் கடத்தல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் செயல்பாடுகள் என்ன. இதில் அரசு எவ்வாறு செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனை போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் நிலை என்ன என்பது குறித்து தமிழக போலீஸ் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (31.10.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் போலீஸ் டிஜிபியின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், “போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க சிறப்பு அதிகாரியாக பெனாசிர் பாத்திமா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தியதாக 3 ஆயிரத்து 688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 710 வாகனங்கள் நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 191 வாகனங்களுக்கான வழக்கு நிலுவையில் உள்ளது. 2 ஆயிரத்து 787 வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை. எனவே இதனை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டது.

The action of Tamil Govt is commendable  High Court Madurai Branch

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்ததற்கு காவல்துறைக்கு பாராட்டுகள். மேலும் போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய தமிழக அரசின் செயல் பாராட்டுக்குரியது” என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.