ADVERTISEMENT

உலகச் சுற்றுச்சூழல் நாள்: பிளாஸ்டிக் பை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுக! அன்புமணி வலியுறுத்தல்

01:30 PM Jun 04, 2018 | Anonymous (not verified)

உலகச் சுற்றுச்சூழல் நாள் பிளாஸ்டிக் பை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் நகரில் ஜூன் 5-ஆம் தேதி கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்' (Beat Plastic Pollution) என்பதை இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐநா அவை முன் வைத்துள்ளது. ஐ.நா. சார்பில் 2018 உலக சுற்றுச்சூழல் நாளை கொண்டாடும் முதன்மை நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.

பிளாஸ்டிக் குப்பை மிகமிக ஆபத்தானது, அணுகுண்டுகளை விட ஆபத்தானவை என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு பிளாஸ்டிக் பை சராசரியாக வெறும் 12 நிமிடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பின்னர் குப்பையில் எறியப்படுகிறது. ஆனால், அது 1000 வருடங்களுக்கு அழியாமல் இருந்து சுற்றுச்சூழலைக் கெடுக்கும். உலக அளவில் ஆண்டுக்கு 5 லட்சம் கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஆண்டுக்கு 1.30 கோடி டன் பிளாஸ்டிக் கடலில் கலக்கிறது. பிளாஸ்டிக் பைகளைத் தின்று கால்நடைகள், வனவிலங்குகள் ஏராளமாக இறக்கின்றன. கடல்வாழ் திமிங்கலங்கள், சீல்கள் மற்றும் பறவைகள் சாகின்றன. கடலின் இயற்கை சூழல் முற்றாக சீரழிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் குப்பை சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் வழிகின்றன, சுற்றுப்புறம் மாசுபடுகிறது. சாலையோரங்களில் தேங்கிக்கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்தி டெங்கு, மலேரியா எனப்பல நோய்களுக்கு காரணமாகிறது. மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புக்கும் பிளாஸ்டிக் பைகளே காரணமாகின்றன. பிளாஸ்டிக் பைகளால் ஆறுகள், குளங்கள், ஓடைகள், ஏரிகள், நிலத்தடி நீர் என எல்லா நீர்வளமும் கடுமையாக மாசுபடுகிறது. பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட குப்பையை எரிப்பதால் மிக ஆபத்தான நச்சுவாயுக்கள் காற்றில் கலக்கின்றன. டையாக்சின் உள்ளிட்ட பலவிதமான நச்சு வாயுக்கள் வெளியாகின்றன. அதிகரிக்கும் புற்றுநோய், ஆண்மைக் குறைவு, குழந்தையின்மை குறைபாடுகளுக்கு குப்பை எரிப்பும் ஒரு முதன்மைக் காரணம் ஆகும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா, இருதய நோய்கள் என பலக் கேடுகளுக்கு குப்பை எரிப்பு காரணமாகும். குப்பை பிரச்சினையும் பிளாஸ்டிக் மாசுபாடும் ஒன்றிணைந்த கேடுகள் ஆகும். இதனை எதிர்க்கொள்ள அனைத்து குப்பைகளையும் கையாளும் அனைத்து விதிகளையும் முறையாக செயல்படுத்த வேண்டும்.



திடக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு, மின்னணு கழிவு, ஆபத்தான கழிவு, மருத்துவக் கழிவு, கட்டடக் கழிவு என குப்பை மேலாண்மைக்கான 6 விதிகள் 2016 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்திய அரசால் வெளியிடப்பட்டன. மாநிலங்களும் நகராட்சிகளும் இந்த விதிகளை செயலாக்குவதற்கான பொதுவான கால அவகாசம் ஓராண்டு வரை அளிக்கப்பட்டது. ஆனால்,மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் இவற்றை முறையாக செயல்படுத்தத் தவறிவிட்டன. மாநில அரசுகளின் மெத்தனப்போக்கை கண்டித்த இந்திய பசுமைத் தீர்ப்பாயம் 2017 ஜூன் 1 முதல் குப்பை மேலாண்மை விதிகளை தமிழக நகரங்கள் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து நகரங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. கடந்த ஆண்டு 2017 ஜூன் 5 சுற்றுச்சூழல் தினத்திலிருந்து நாட்டின் எல்லா நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மைக்கான பிரச்சார இயக்கத்தை தொடங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால், ஓராண்டு காலம் கடந்த பின்னரும் இன்னமும் கூட சட்டவிதிகள் வெற்று காகிதமாகவே உள்ளன. அதே போன்று இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தில் தொடங்கும் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரமும் வாய்ப்பேச்சாக முடிந்துவிடக் கூடாது.

தமிழ் நாடு அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளையும், பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களது பொருட்களால் உருவாகும் குப்பையை அவர்களே வாடிக்கையாளரிடமிருந்து திரும்பவும் காசுகொடுத்து வாங்கிக்கொள்ளும் சட்டபூர்வமான ‘‘உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கையை’’ செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பழக்கத்தை கைவிட்டு துணிப்பைகளுக்கு மாற வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு துணிப்பையை கொண்டு செல்வதன் மூலம் பிளாஸ்டிக் பை கலாச்சாரத்தை ஒழிக்க உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்க வேண்டும்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT