ADVERTISEMENT

"வேற ஜாதி பையன கல்யாணம் பண்ணுனா இதுதான் கதி?" - இளம்பெண்ணை பழிவாங்கும் கிராமம்.. உதவும் அரசு அதிகாரிகள்!

06:27 PM Mar 30, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

"பத்திரம் இருக்கு.. பட்டா கொடுக்கமாட்றாங்க. வீடு இருக்கு.. கரெண்ட் கொடுக்கமாட்றாங்க.. தண்ணி கொடுக்கமாட்றாங்க.. அக்கம் பக்கத்துல யாரும் பேசமாட்றாங்க.. ஊரவிட்டே ஒதுக்கிவசிருக்காங்க. கவர்ன்மென்ட் கொடுக்குற எந்த உதவியும் எங்களுக்கு வர்றது இல்ல. எல்லாத்துக்கும் காரணம், நான் சாதிமாறி கல்யாணம் பண்ணிகிட்டதுதான். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த என் காதல் கணவரை, இந்த சாதிய அமைப்பு எரிச்சே கொன்னுடுச்சு. நாங்க வாழ்ற ஒவ்வொரு நொடியும் நெருப்புல நிக்குறோம். எங்களுக்கான அடிப்படை உரிமையை அரசு செஞ்சுகொடுக்கனும். இல்ல, சாதிதான் பிரச்சனைன்னா என்னையும் என்னோட ரெண்டு புள்ளைங்களையும் சேத்து கொன்னுடனும்.." இப்படி ஒரு கைம்பெண் கையறு நிலையில் புலம்பும் கொடுமையான சம்பவம், இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழும் திராவிட மண்ணில்தான் நிகழ்ந்துள்ளது.

சாதிமறுப்பு செய்துகொண்ட காரணத்தால், ஒரு ஊரே, அரசு அதிகாரிகளுடன் சேர்ந்துகொண்டு ஒரு கைம்பெண்ணை பழிதீர்த்து ரசிக்கும் வன்மம், மதுரை மேலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரத்தில் நடப்பதாக நக்கீரனுக்கு பிரத்யேக தகவல் கிடைத்தது. அடுத்த நாள், கைம்பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியது நக்கீரன் டீம். கைம்பெண் ராசாத்தி கதவைத் திறந்து வரவேற்றார். அந்திசாயும் நேரம் என்பதால், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய பிள்ளைகள், யூனிஃபார்மை கூட கழட்டாமல், பாடம் படித்துக் கொண்டிருந்தனர். சிம்னி விளக்கு தந்த சின்னச் சின்ன வெளிச்சத்தில், தீண்டாமை இழிவை அகற்ற இடையறாது போராடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் படித்துக்கொண்டிருந்த வாசகம் 'தீண்டாமை ஒழிப்பு'. சுற்றுப்புறத்தாலும் சொந்தபந்தத்தாலும் முற்றாக ஒதுக்கப்பட்டு, தீண்டாமையால் எரிந்துகொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, பிறசாதி குழந்தைகளுடன் விளையாடக்கூட அங்கு அனுமதியில்லை. இப்படிப்பட்ட சூழலில், தீண்டமை ஒழிப்பு பற்றி பிள்ளைகள் வாய்விட்டுப் படித்தனர். இந்த நூற்றாண்டின் மிக மோசமான வன்முறையாக தெரிந்தது அந்த காட்சி.

மனதைக் கல்லாக்கிக் கொண்டு ராசாத்தியிடம் பேசினோம். சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதி முத்துபிரபு -ராசாத்தி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும், கடந்த 2010 ஆம் ஆண்டு சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இருவரும் திருமணம் செய்துகொண்டதோடு, முறைப்படி தங்களின் திருமணத்தை பதிவும் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். முதல் குழந்தை துர்கா ஆறாவது படித்து வருகிறார். இரண்டாவது குழந்தை, தரணிக்கு ஐந்து வயது ஆகிறது.

ஆரம்பத்தில் முத்துபிரபு வீட்டில் இவர்களை ஆதரித்து அன்பு பாராட்டியுள்ளனர். ஆனால், போகப்போக, அவள் உன் பேச்சைக் கேட்டு நடக்க மாட்டாள். அவள் பெரிய இடத்து பெண். அவங்க ஆளுங்க உன்ன சும்மாவே விடமாட்டாங்க என அச்சுறுத்தியுள்ளனர். அதனால் ராசாத்திக்கும் முத்துபிரபுவுக்கும் அடிக்கடி சண்டை வந்தபடியே இருந்துள்ளது. ஒருகட்டத்தில் ராசாத்தியின் அன்பையும், அவர் தன்மீது வைத்துள்ள உறுதியான நம்பிக்கையையும் புரிந்துகொண்ட முத்துபிரபு, ராசாத்தி மீது அன்பைப் பொழிந்துள்ளார். இதனால், இருவரும் மீண்டும் சந்தோஷமாக வாழ்ந்துள்ளனர். இருபினும் மனைவியின் குடும்பத்தாரை நினைத்து அடிக்கடி மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார் முத்துபிரபு. இதற்கேற்றாற்போல், பலரும் அவரிடம் ஏதாவது ஒன்றை சொல்லி, அச்சுறுத்தியே வந்துள்ளனர். செல்லும் இடமெல்லாம் சாதியின் பெயரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வந்துள்ளார். அதிதீவிர மனஉளைச்சலில் காணப்பட்ட முத்துபிரபு, 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

காதல் கணவனின் இந்த முடிவால் விரக்தியடைந்த ராசாத்தி இரண்டுமுறை தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனாலும், குழந்தைகளை நினைத்து அந்த முடிவை கைவிட்டுள்ளார். கிடைக்கும் வேலைக்குச் சென்று, சம்பாரிக்கும் சொற்ப வருமாணத்தில் பிள்ளைகளை கரைசேர்த்துவருகிறார். இந்நிலையில், ராசாத்தியின் பாட்டனார் சாத்தையாவும், பாட்டி வீரம்மாளும் சுயமாக சம்பாத்தித்து வாங்கிய இடத்தில், பாட்டியின் அரவனைப்போடு ராசாத்தியும் அவரது இரண்டு பிள்ளைகளும் வசித்துவருகின்றனர். ஊரையே எதிர்த்துக்கொண்டு பேத்திக்காக, அவரது பாட்டி துணிச்சலுடன் போராடி வருகிறார்.

பாட்டி வீரம்மாளின் இடத்திற்கான பத்திரம் இருக்கிறது. ஆனால், இன்றுவரை ஜாதியை காரணம் காட்டி, பட்டா வழங்காமல் இழுத்தடித்துவருவதாக கலங்குறார் ராசாத்தி. பட்டா இல்லாததால், இந்த வீட்டுக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர் வசதி எதுவும் கிடைக்கவில்லை. அரசு அதிகாரிகளான VAO உட்பட எல்லோருமே ஜாதியை காரணமாக காட்டி தட்டி கழிக்கிறார்கள். 'ஜாதி மாறி கல்யாணம் செய்தது என் தவறாகவே இருந்தாலும், என் பிள்ளைகளின் எதிர்காலத்தை அழித்துவிடாதீங்க' என கண்ணீர்வழிய கும்பிடுகிறார் ராசாத்தி.

தமிழகத்தில் நடைபெறுவது சமூகநீதி ஆட்சி என தமிழக முதல்வர் அழுத்தமாக கூறி வருகிறார். இருளில் கிடக்கும் அவர்களின் வாழ்வுக்கு, விரலசைவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசால், வெளிச்சம் கொடுக்க முடியும். சாதிய கொடுமையில், தத்தளிக்கும் குடும்பத்தை தமிழக அரசு, விரைந்து கரை சேர்க்கும் என்றே நம்புவோம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT