ADVERTISEMENT

என்டிசி சான்றிதழ் தர 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு குடைச்சல்; காவல் ஆய்வாளர் மீது வழக்கு!  

10:34 AM Aug 21, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேச்சேரி அருகே, நிலப்பத்திரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என சான்றிதழ் தருவதற்காக, காவலாளியிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு குடைச்சல் கொடுத்த காவல்துறை ஆய்வாளர், காவலர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அரங்கனூரைச் சேர்ந்தவர் பிரபு. காவலாளியாக வேலை செய்து வருகிறார். உள்ளூரில் இவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தின் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து வங்கியில் கடன் வாங்க முடிவு செய்திருந்தார். இதையடுத்து அவர் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேச்சேரியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்குச் சென்று பத்திரங்களை நகல் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். அப்போது அவர் வரும் வழியில் பத்திரகாளியம்மன் கோயிலுக்குச் சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு வந்த பார்த்தபோது, தனது மோட்டார் சைக்கிளில் மாட்டிவிட்டுச் சென்ற பை மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

அந்தப் பைக்குள்தான் பத்திரம் உள்ளிட்ட அனைத்து உண்மையான ஆவணங்களும் இருந்தது. பையோடு ஆவணங்களும் தொலைந்து போனதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பிரபு, மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் சண்முகம், நிலப்பத்திரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை (நான் டிரேசபிள் சர்டிபிகேட்) கொடுக்க வேண்டுமானால் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதற்கு மறுத்துவிட்ட பிரபு, சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையில் ஆய்வாளர் சண்முகத்தின் மீது புகார் அளித்தார். நிலப்பத்திரம் மாயமானது தொடர்பாக ஓராண்டாக என்டிசி சான்றிதழ் தராமல் இழுத்தடித்து வருவதாகவும், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தராவிட்டால் சான்றிதழ் தர முடியாது என்றும் புகாரில் கூறியிருந்தார். ஆய்வாளர் சார்பில் அவருடைய வாகன ஓட்டுநரான காவலர் மனோஜ் விஜயன்தான் தன்னிடம் வந்து பணம் கேட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் முதல்கட்ட விசாரணை நடத்தினர். ஆய்வாளர் சண்முகம், காவலர் மனோஜ் விஜயன் ஆகியோர் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT