ADVERTISEMENT

திடுக் பின்னணி:  கொலை வழக்காக மாறிய கார் விபத்து

01:01 PM Jan 31, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாளையின் கே.டி.சி.நகரைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன்(56). அருகிலுள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ரயில்வே நிலைய கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர். ஜன. 16 அன்று செந்தாமரைக்கண்ணன் மாலை தனது பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பைக் புளியங்குளம் தாண்டி ஆளரவமற்ற பரும்பு பகுதியில் வரும்போது பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்ல, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட செந்தாமரைக்கண்ணன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருக்கிறார்.

இதையடுத்து அவரது மகன் பிரதீப் கொடுத்த புகாரின் அடிப்படையில் விபத்து வழக்குப்பதிவு செய்த செய்துங்கநல்லூர் போலீசார், மேல் விசாரணை நடத்தி விபத்து ஏற்படுத்திய காரைத் தேடத்துவங்கினர். காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் காரைத் தேடினர். சாலையோர சி.சி.டி.வி. காட்சிகளை இன்ஸ்பெக்டர் அருள் ஆய்வு செய்திருக்கிறார். செந்தாமரைக்கண்ணனைப் பின்தொடர்ந்து ஒரு கார் செல்வது தெரியவர அந்தக் காரின் நம்பரைக் கொண்டு அதனைத் தேடத் தொடங்கினர்.

இதனிடையே செந்தாமரைக் கண்ணன் மீது மோதிய கார் தற்செயலாக மோதியதாகத் தெரியவில்லை. அந்தக் கார் முதலில் மோதிவிட்டுப் பின் மறுபடியும் வந்து இரண்டாவது முறையாகவும் மோதிவிட்டுப் போனது. எனவே இது விபத்தல்ல. திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை என்கிற தகவல் காவல்நிலையம்வரை செல்ல, அருள் தலைமையிலான தனிப்படை அலர்ட் ஆனது. மேலும் அந்தக் காரைத் தேடியபோது, அது பரும்பு பகுதியை அடுத்த சாய்பாபா கோவில் அருகே சாலையின் பக்கம் நிற்பதாகத் தகவல் கிடைக்க, தனிப்படையினர் அந்தக் காரை வளைத்துப் பிடித்து அதிலிருந்த வல்லநாட்டை சேர்ந்த மகேஷ்(33) மற்றும் சுடலைமணி (29) இருவரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையான செந்தாமரைக்கண்ணனுக்கும் நாசரேத் அருகேயுள்ள கொமந்தா நகரைச் சேர்ந்த சாம்ராட் பாண்டியன் குடும்பத்தினருக்கும் ஒரு நிலப் பிரச்சனைத் தொடர்பாக 15 வருடங்கள் முன்பகைமை இருந்திருக்கிறது. சாம்ராட் பாண்டியன் ஜன. 4ம் தேதியன்று கோவா சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பும்போது கோவாவில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்திருக்கிறார். அதே சமயம் அவரது நண்பர்கள் சாம்ராட் பாண்டியன் மறைவு குறித்து முகநூல் மற்றும் வாட்ஸ் அப்களில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில், இறைவனின் தண்டனை என்று செந்தாமரைக்கண்ணன் பதிவு செய்திருந்தாராம். இதனால் ஆத்திரமான சாம்ராட் பாண்டியனின் சகாக்கள் வாகன விபத்து போன்று திட்டமிட்டு அவரைச் சேஸ் செய்து கொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. காரணம், நிலப் பிரச்சினை தொடர்பாக செந்தாமரைக்கண்ணனுக்கு சாம்ராட் பாண்டியனின் தரப்பு கடுமையான நெருக்கடி கொடுத்ததின் விளைவாக செந்தாமரைக்கண்ணன் அப்படிப் பதிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, 304 A விபத்து வழக்கு 302 ஐ.பி.சி. கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என்கின்றனர் தனிப்படையினர்.

செந்தாமரைக் கண்ணன் கொலையில் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் மூளிகுளத்தைச் சேர்ந்த ஜெகன் பாண்டியன், பக்கபட்டியைச் சேர்ந்த கந்தகுமார் உள்ளிட்ட மூன்று பேர் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறிய மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், விரைவாக துப்பு துலக்கிய தனிப்படையினரைப் பாராட்டினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT