ADVERTISEMENT

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி மனித சங்கிலி போராட்டம்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

06:17 PM May 13, 2019 | selvakumar

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்துவதென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ADVERTISEMENT


இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியமும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.எஸ்.மாசிலாமணியும் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில், காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது டெல்டா விவசாயிகளையும், பொதுமக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

ADVERTISEMENT

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்தால் காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சேவை சங்கங்களும் தொடர்ந்து போராடி வருகிறது.

இதனால் தற்காலிகமாக ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் 2016-ம் ஆண்டு மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையின்படி, மீத்தேன், ஷேல் காஸ் உள்ளிட்ட பலவகை எண்ணெய் எரிபொருள் எடுப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு அனுமதியளித்து வேதனையை மூட்டியது.

திருவாரூர், நாகை மாவட்டங்களில் மரபுசாரா எண்ணெய் எடுப்பு பணிகளுக்கு மத்திய வனம் மற்றும் சுற்று சூழல் அமைச்சகத்திற்கு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தது. இதனை ஏற்று அந்நிறுவனம் மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தவும், சுற்று சூழல் அறிக்கை, சுற்றுசூழல் மேலாண்மை அறிக்கை தாக்கல் உள்ளிட்ட 32 நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்ற நிலையில் மத்திய அரசு டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் கடிதம் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் மறைமுகமாக ஆதரித்து வருவது இதன் மூலம் தெளிவாகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் திருக்களார், ராயநல்லூர், நான்காம்சேத்தி, சேரன்குளம், நெம்மெலி, கருக்கங்குடி, கர்ணாவூர், அரிச்சபுரம், கூத்தாநல்லூர், பூதமங்கலம், மேலராதாநல்லூர், வெங்காரம்பேரையூர், கமலாபுரம், கீழகொத்தங்குடி, புலிவலம், வெங்கடேசபுரம் உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது. சாதரண ஏழை விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் நிரம்ப வாழும் இப்பகுதியில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் தங்களின் வாழ்வாதாரமும், ஜீவாதாரமும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் தற்கொலையை தவிர வேறு வழியில்லாத நிலையை அரசே உருவாக்குவது வேதனையளிக்கிறது.

சுற்று சூழலுக்கும், விவசாயத்துக்கும், பொது மக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாத வேதாந்தா நிறுவனத்திற்கு இரு உரிமங்களின்படி 247 இடங்களில் ஆய்வு நடத்த அனுமதி அளித்து மக்களை எடப்பாடி அரசு அச்சப்பட வைக்கிறது’’ என்றவர்கள்.

மேலும், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை அமைத்து அப்பகுதியில் சுற்றுச்சூழலையை நாசப்படுத்தியதுடன், கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்கும், அப்பாவி பொதுமக்கள் 13 பேரின் உயிர் பலிக்கும் காரணமான வேதாந்த குழுமத்திற்கு தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையும். அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு துணை போவதையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் அதிமுக உள்ளிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம் என்று அறிவித்திருந்த நிலையில், தேர்தல் முடிந்தவுடன் திட்டத்தை செயல்படுத்துவது மக்களை மேலும் வஞ்சிக்கும் செயலாகும். காவிரி டெல்டா மாவட்டத்தையும், தமிழக விவசாயிகளையும் பாதுகாத்திட ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூன் மாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்.’’ என்று கூறியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT