Skip to main content

திமுகவிடம் பாஜக வைத்த வேண்டுகோள்...உதயநிதியை நிறுத்தி ரிஸ்க் எடுக்கணுமா... அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

எம்.பியானதால் வசந்தகுமார் ராஜினாமா செய்த நாங்குநேரி சட்ட மன்றத் தொகுதி, ராதாமணி எம்.எல்.ஏ மரணத்தால் காலியான விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல்கள், மாநிலம் முழுவதும் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் எது முதலில் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவிடம் சமீபத்தில் விவாதித்திருக்கிறார்கள் தலைமை தேர்தல் ஆணைய டெல்லி அதிகாரிகள். அப்போது, நீதிமன்றம் கண்டித்தாலும்கூட, உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடவே அரசு விரும்புகிறது. அதனால் இடைத்தேர்தலை எப்போது நடத்த ஆணையம் தீர்மானிக்கிறதோ அப்போது நடத்தட்டும் என்கிற அரசின் விருப்பத்தை டெல்லிக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே, இடைத்தேர்தலின் தேதி குறிக்கப்பட்டது என்கிறார்கள் தேர்தல் ஆணைய தரப்பினர்.

 

dmkதேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளிடத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிவிட்டு, விக்கிரவாண்டியில் தி.மு.க. போட்டியிடுவது என ஸ்டாலின் எடுத்த முடிவு, காங்கிரசாருக்கு ஆச்சரியம்தான். அதனால் அரசியல் களத்தில் பலவித யூகங்கள் வெளிப்படுகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரிடம் பேசியபோது, "நாங்குநேரியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் எழுதி மீடியாக்களுக்கு தந்ததால், மேலிடம் நடவடிக்கை எடுக்குமளவு நிலைமை இருந்தது. அ.தி.மு.க.வை எதிர்க்க தி.மு.க.தான் சரி என்பதே ஸ்டாலின் நிலைப்பாடாக இருந்தது. இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள பா.ஜ.க., நாங்குநேரியில் போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது. அப்படி இருந்தால், தி.மு.க.வை எதிர்ப்பது பா.ஜ.க.வுக்கு கஷ்டம், காங்கிரஸ் என்றால் ஜெயிக்கலாம் என நினைத்து, நாங்குநேரியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்துவிடுங்கள் என தி.மு.க.விடம் பா.ஜ.க. வேண்டுகோள் வைத்திருக்க வாய்ப்புண்டு. பா.ஜ.க.வுக்கு ஒதுக்காமல் அ.தி.மு.க.வே போட்டியிடும் பட்சத்தில், அ.தி.மு.க.வின் வெற்றிக்காக எடப்பாடி பழனிச்சாமியும் அதே பாணியில் தி.மு.க.விடம் கோரிக்கை வைத்திருக்கலாம்'' என்கிறார் யூகமாக.
 

dmkஇடைத்தேர்தலை எதிர் கொள்வது குறித்து எடப்பாடியின் ஆதரவாளர்களான அ.தி.மு.க.வின் சீனியர்கள் சிலரிடம் பேச்சு கொடுத்தபோது, "நாடார் சமூக பிரமுகர்கள் பலருக்கும் பல உயரிய பதவிகள் கொடுத்து கௌரவித் திருக்கிறது பா.ஜ.க. தலைமை. அதனால், காங்கிரசை ஆதரித்து நின்ற நாடார் சமூகம், தற்போது பா.ஜ.க.வை ஆதரிக்கிறது. இதனைச் சொல்லியே நாங்குநேரியை தங்களுக்கு ஒதுக்குமாறு ஓ.பி.எஸ். சிடம் கேட்டிருக்கிறது பா.ஜ.க. இதனை எடப்பாடியிடம் ஓ.பி.எஸ். சொல்ல, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நம்முடன் கூட்டணி வைக்கும் போதே, இடைத் தேர்தல் தொகுதிகளை பா.ஜ.க. கேட்கக் கூடாது என்கிற நமது நிபந்தனையை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனடிப்படையில்தான் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் சீட் கேட்டு பா.ஜ.க. நெருக்கடி தரவில்லை. இப்போது நாங்குநேரியை விட்டுக்கொடுக்கச் சொல்வது சரியல்ல ’ என சொல்லியுள்ளார். இந்த நிலையில், இரண்டு தொகுதிகளிலும் தனது ஆதரவாளரை நிறுத்த நினைக்கிறார் எடப்பாடி. ஆனால், இதற்கு ஓ.பி.எஸ். சம்மதிக்கவில்லை. அதே சமயம், தனது குடும்பத்தினருக்காக விக்கிரவாண்டியை கேட்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். இரு தொகுதிகளிலும் சீட் கேட்டு கட்சியின் வி.வி.ஐ.பி.கள் பலரும் மல்லுக்கட்டியதால் வேட்பாளரை முடிவு செய்வதில் ஏகத்துக்கும் நெருக்கடியை சந்தித்தார் எடப்பாடி'' என்கின்றனர்.

 

dmkவேட்பாளர் தேர்வில் உளவுத்துறையின் உதவியை நாடியிருந்தார் எடப்பாடி. இரு தொகுதிக்கும் அவர் குறித்துக் கொடுத்த தலா 4 வேட்பாளரை பற்றிய செல்வாக்கு நிலவரங்களை தந்தது உளவுத்துறை. அவர்கள் தரப்பில் நாம் பேசியபோது, "தேர்தலில் வெற்றிபெற கூட்டணி வலிமை ஒருபுறமிருந்தாலும் வாக்குகளை பர்ச்சேஸ் செய்வதில்தான் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. இரு தொகுதிகளின் வெற்றி-தோல்வி ஆட்சிக்கு எந்த வகையிலும் சிக்கலை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால், எடப்பாடியின் இமேஜைக் காப்பாற்ற இரு தொகுதிகளின் வெற்றி அ.தி.மு.க.வுக்கு தேவைப்படுகிறது. இதனை செய்தால்தான் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலை துணிச்சலாக எதிர்கொள்ளவும் முடியும். அதற்காகத்தான் எடப்பாடிக்கு வெற்றி அவசியமாகிறது.


தோழமைக்கட்சிகளின் ஆதரவுடன் வாக்காளர்களை பர்ச்சேஸ் செய்ய முடிவு செய்திருக்கிறது ஆளுந்தரப்பு. நாங்குநேரியில் 2 லட்சத்து 56 ஆயிரம் வாக்காளர்களும், விக்கிரவாண்டியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 500 வாக்காளர்களும் இருக்கின்றனர். இந்த இரண்டு தொகுதிகளிலுமே சராசரியாக தலா 1 லட்சம் வாக்குகளை குறிவைக்கிறது அ.தி.மு.க. தலைமை. ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய் என 30சி பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது. இது தவிர, தோழமைக் கட்சிகள், உதிரிக் கட்சிகள், தி.மு.க.வின் அதிருப்தியாளர்கள், சமூக அமைப்புகள், சாதி சங்கங்களுக்கென தனியாக 10 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

வாய்ப்புக் கிடைக்கும் வேட்பாளர் தனியாக பெருந்தொகை செலவு செய்ய தயாராக இருக்க வேண்டும் என ஆலோசித்துள்ளனர். மேலும், ஒரு அமைச்சரின் கட்டுப்பாட்டில் 8 ஆயிரம் வாக்குகள் பிரித்து தரப்படவிருக்கிறது. ஒவ்வொரு அமைச்சரின் கீழ் எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குழுவும் அமைக்கப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதிலிருந்து பணப்பட்டுவாடா செய்வது வரை தனித்தனி குழுக்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன'' என அ.தி.மு.க.வின் வியூகங்களை விவரிக்கின்றனர்.

எதிர்க்கட்சியான தி.மு.க.வும் வெற்றியை குறிவைத்து களமிறங்கியுள்ளது. அறிவாலயம் தரப்பில் விசாரித்தபோது, "இரு தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றாலும் ஆட்சி மாற்றம் வரப்போவதில்லை என்பதால்தான் நாங்குநேரியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து டெஸ்ட் வைத்துள்ளோம். முடிவுகள் எப்படி வந்தாலும் எங்களுக்கு சாதகம்தான். காங்கிரஸ் வெற்றிபெற்றால் கூட்டணியின் வலிமை என சொல்லிக்கொள்ளலாம். தோல்வியடைந்தால் உள்ளாட்சித் தேர்தலில் குறைந்த இடங்களை அவர்களுக்கு கொடுத்து ஏற்க வைப்போம். மறுத்தால் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேற்றுவோம்.

விக்கிரவாண்டியை பொன்முடியின் பொறுப்பில் கொடுக்கவிருக்கிறது தலைமை. உதயநிதியை போட்டியிட வைத்து ஜெயிக்க வைக்க வேண்டும் என விரும்பினார் பொன்முடி. இது குறித்து ஸ்டாலினிடம் பொன்முடி பேசிய நிலையில், தனது மகன் சிகாமணியை உதயநிதியிடம் விவாதிக்க வைத்தார். ஆனால், இடைத்தேர்தலில் உதயநிதியை நிறுத்தி ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என ஓ.எம்.ஜி. குரூப்பும் கட்சியின் சீனியர்களும் ஸ்டாலினிடம் சொல்லியுள்ளனர்.

இந்த நிலையில், எடப்பாடியின் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என மக்களே தீர்ப்பளித்திருக்கின்றனர் என்பதை நிரூபிக்க விக்கிரவாண்டியின் வெற்றி ஸ்டாலினுக்கு அவசியமாக இருக்கிறது. இதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியும் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்கிற இமேஜும் கிடைக்கும் எனவும் தலைமை யோசித்துள்ளது. அதனால், ஆட்சியாளர்களின் பண விநியோகத்தை தடுப்பது ஒரு புறமெனில், அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடாவை மேட்ச் செய்யும் வகையில் ஒரு ஓட்டுக்கு அதிகபட்சம் 2000 ரூபாய் என்கிற அளவில் 20சி பட்ஜெட்டை போட திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கேற்ற வகையிலேயே வேட்பாளர் நிறுத்தப்படுவார். வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதி என்பதால் அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள பா.ம.க.வின் வாக்குகளை எதிர்கொள்ளும் வகையில் வன்னியருக்கு வாய்ப்பளிக்கவும் ஆலோசனை நடந்தது. ஆனால், வன்னியர் என்றில்லை; தலைமை யாரை நிறுத்துகிறதோ அவரை ஜெயிக்க வைக்கிறேன் என சொல்லியிருக்கிறார் பொன்முடி. மேலும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வி லுள்ள 65 மாவட்ட நிர்வாகிகள் என அனைவரையும் தொகுதிக்குள் களமிறக்க வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன'' என்று விவரித்தனர்.

அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு அதன் தோழமைக் கட்சிகளின் ஆதரவு கிடைத்திருக்கும் நிலையில், தினகரனின் அ.ம.மு.க.வும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனால் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கு மிடையே போட்டி அதிகரித்துள்ளது. இந்த வலிமையான போட்டியை எதிர்கொள்ள களத்தில் குதிக்கிறது சீமானின் நாம் தமிழர் கட்சி. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் ரிலீஸானதும் சூடு பிடிக்க விருக்கிறது தேர்தல் களம்.
 

Next Story

“கள்ளச்சாராய விற்பனைக்கு ஏலம் நடந்துள்ளது” - கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திரபாலாஜி 

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
 Rajendra Balaji said An auction has been held for t sale of illicit liquor

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி, விருதுநகரில் அதிமுக நடத்திய கண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. 

அதில் பேசிய முன்னாள் அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 54 பேர்  உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மருத்துவமனையில் 150- க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின்  முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பு கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார். போதைப் பொருள், கள்ளச்சாராயம்  தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. தமிழக மக்களின் கண்ணீர் ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை. உலகமே உற்றுப்பார்க்கின்ற வகையில்  தமிழ்நாடு பேசுபொருளாகிவிட்டது.

அப்பாவி பொதுமக்கள் உடல் வலியைப் போக்குவதற்கு பழக்கப்பட்டுப்போன  மது அருந்தும் பழக்கத்தை விடமுடியாதவர்களாக உள்ளனர். விலை  குறைவான கள்ளச்சாராயத்தை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதி மக்கள்  வாங்கிக் குடித்துள்ளனர். அதனால், ஊரே இன்று சுடுகாடாக மாறிவிட்டது.  தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே முதலமைச்சருக்குத் தெரியவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் தோற்றாலும், அதிமுக ஓட்டு சதவீதத்தில் அதிகம் பெற்றுள்ளது. அதிமுக வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.  திமுக தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. திமுகவுக்கு தனித்து நிற்கும் தைரியம் கிடையாது. கூட்டணிக் கட்சி வைத்து ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அப்படி இருந்தும் நாம் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியிலும் தென்காசி தொகுதியிலும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளோம். விருதுநகர் தொகுதியில் 4379  ஓட்டு வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றியை இழந்திருக்கிறோம் அதிலும்  பிரச்சனை இருக்கிறது. வெற்றியை நாம் தொடவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. வெற்றி நம் பக்கம்தான் இருக்கிறது. அதிமுக ஆட்சி அமைத்து இ.பி.எஸ். மீண்டும் முதலமைச்சராவார்.  நாம் ஆட்சிக்கு வந்தவுடன்,  நமக்கு  எதிராகச் சதி செய்த அனைவரும் சட்டத்திற்கு முன்பாக நிறுத்தப்படுவார்கள்.  என்றைக்கும் அதிமுக காரன் கோழை அல்ல. அதிமுகவில் உள்ளவர்களின்  நாடி  நரம்புகளில்  எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருடைய வீரம் இருப்பதால் எந்தக்  கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது.  

முதல்வர் ஸ்டாலின் ஏன் பதவி விலக வேண்டும் என்பது குறித்து இ.பி.எஸ். விளக்கமாகப் பேசியிருக்கிறார். கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் காவல்துறையினர் ஆய்வு செய்யச் சென்றபோது எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராய ஊறல்கள் தான். இந்தக் கள்ளச்சாராயத்தைக் குடிப்பதால் மக்கள் உயிர் போகுமென்பது இந்த அரசுக்கு தெரியாதா ? கல்வராயன் மலை இன்று சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுகிறார்.கல்வராயன் மலை இன்று கள்ளச்சாரய மலை ஆகிவிட்டது. காவல்துறையினரின் கைகள் யாரால் கட்டப்பட்டுள்ளது? அந்தந்த பகுதிகளில் சாராயம் விற்பனை செய்ய ஏலம் விடப்பட்டிருக்கிறது. இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த  அரசியல்வாதி  யார்? மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை  கண்காணிப்பாளரை மாற்றிவிட்டால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடுமா? இதற்கு நடவடிக்கை எடுக்காமல் விட்டது யார்? கண்டுகொள்ளாமல் விடச் சொன்னது யார்? எனவே,  காவல்துறையைக்  கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் இதற்கு முழு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய  வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் ஆட்சிக்கு  வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று சொன்னாரா?  இல்லையா?  தற்பொழுது அதைச் செய்தாரா ? அவரது தங்கை கனிமொழி இளம் விதவைகள்  தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளனர்.  இதற்குக் காரணம் இ.பி.எஸ். என்றும்,  அதனால் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்றும் பேசினார்.  திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் முடிந்த நிலையில், முதல்வர்  ஸ்டாலின் இதுவரைக்கும்  மதுவிலக்கை அமல்படுத்தினாரா?  இதை விட்டுவிட்டு கள்ளச்சாராயம் குடித்து  இநந்தவருக்கு ரூபாய் 10 லட்சம் தருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு  சிவகாசி அருகே பட்டாசு வெடிவிபத்தில் 10 பேர் இறந்ததற்கு ரூபாய் மூன்று  லட்சம் தான் கொடுத்தார்.  நாட்டை காக்கும் ராணுவ வீரர் மரணம் அடைந்தால்  ரூபாய் 5 லட்சம்தான் தருகிறார். இந்த நடவடிக்கைகளைப்  பார்க்கும்போது  கள்ளச்சாராயத்தை  நீங்களே ஊக்கப்படுத்துவது போல் தெரிகிறது.  

பட்டாசு  தொழிற்சாலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு  30 லட்சம் ரூபாய் தர வேண்டும். ஊர் மக்கள் சந்தோஷமாக இருக்க,  தனது அழகிய மேனியைக் கருக்கி உயிரை விடுபவன் தான் பட்டாசுத் தொழிலாளி. அவர்களுக்கு கவலை கிடையாதா? அவர்களது பிள்ளைகளின் படிப்புக்கு வழியில்லையே? ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களைத் தேடித்தேடிச் செல்கிறீர்கள். சட்ட விரோதமாக தொழில் செய்தால் ரூபாய் 10 லட்சம் தருகின்றீர்கள். சட்டத்திற்கு  உட்பட்டு தொழில் செய்து இறந்தால் ரூபாய் 3 லட்சம் தருகின்றீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்?  இங்கு சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.  கேட்பதற்கு ஆள் இல்லை. 40 தொகுதியிலும் ஜெயித்து விட்டோம்.  அடுத்த சட்டமன்றத்திலும் 234 தொகுதிகளில் வென்று விடுவோம் என்ற அகம்பாவத்தில் திமுக இருந்து  வருகிறது. மக்கள் என்ன ஏமாளியா? கோமாளியா? மக்கள் பார்த்துக்  கொண்டுதான் இருக்கிறார்கள்.

சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமில்லை என்பதால், சட்டமன்றத்தில்  அதிமுகவுக்கு வலுவாக ஆதரவளிப்பார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 234 தொகுதியிலும் எளிதாக வெற்றி பெறும் .  இந்தக் கள்ளச்சாராய விஷயத்தில் திமுக காரனுக்குத் தொடர்பு உள்ளது என்று  இ.பி.எஸ். கூறி வருகிறார்.  இதை விசாரிக்க திமுக அரசு முன்வரவில்லை.  ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர்  ‘கொலை செய்பவனால் ஒரு குடும்பம்  மட்டுமே பாதிக்கும். ஆனால் ஊரில் கள்ளச்சாராயம் விற்பவனால் பல்வேறு  குடும்பங்கள் நாசமாகப் போகும்.’ என்று கடுமையாகக் கண்டித்துள்ளார். 

எனவே, கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதுதான் அடித்தட்டு மக்களின்  கோரிக்கை, பொதுமக்களின் கோரிக்கை, அதிமுகவின் கோரிக்கை,  இபிஎஸ்ஸின் கோரிக்கை, நல்ல மனிதர்களின் கோரிக்கை. கள்ளச்சாராயத்தால் பல உயிர்களை இழந்த கள்ளக்குறிச்சிக்கு இதுவரை மு.க.   ஸ்டாலின் செல்லவில்லை. ஏழைகளின் உயிர் என்ன அவருக்குக் கரும்பா? தப்போ, சரியோ, விவரம் தெரியாமல் இறந்தவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக்கூட முதல்வர் போகவேண்டாமா? இந்த விஷயத்தில் 20 பேர் தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இன்னும்  நிறையக் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர். எனவே அவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.” என்றார்.  

Next Story

“கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை என்கவுண்டரில் போட வேண்டும்”- கே.சி.கருப்பண்ணன்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
K.C. Karuppannan said We must encounter those who sell illicit liquor

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம் என்று கூறி இன்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் எம்.எல்.ஏ பேசியதாவது:- “கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. சட்டமன்றத் உறுப்பினர் செந்தில்குமார் கடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடர் போது கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொடுத்த போது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 

அன்றைய தினமே நடவடிக்கை எடுத்து வந்திருந்தால் தற்போது கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்து இருக்காது. அ.தி.மு.க.வுக்கு நல்ல பெயர் வந்து விடும் என்ற எண்ணத்தில் தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.எல்.ஏ, பஞ்சாயத்து தலைவர்கள் எஸ்.பி.யிடம் சொன்ன போதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக தி.மு.க பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். 

K.C. Karuppannan said We must encounter those who sell illicit liquor
கே.சி.கருப்பண்ணன் (கோப்புப்படம்)

கள்ளச்சாராயம் மூலம் ஏற்பட்ட இத்தனை உயிரிழப்புக்கு தி.மு.க அரசுதான் காரணம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை தி.மு.க அரசின் ஏவல் துறையாக உள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சினை காப்பாற்ற சாராயம் தயாரித்த நபர்கள் மீது நிறைய வழக்குகள் இருப்பதால் அவர்களை என்கவுண்டரில் போடுங்கள். அப்பதான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும்.” இவ்வாறு பேசினார்.