ADVERTISEMENT

மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்துவீர்! கி.வீரமணி அறிக்கை

03:59 PM Jan 12, 2019 | rajavel


ADVERTISEMENT

மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மனிதர்களில்தான் வர்ணம் என்ற ஒன்றைத் திணித்துள்ளார்கள் என்று எண்ணவேண்டாம்.

மாடுகளிலும் பசு என்றால் உயர் வருணம்; எருமை என்றால் பஞ்சம - சூத்திர இனம் - பிறவியிலேயே அது கருப்பு என்ற நிலை இங்குண்டு.

அதனால்தான் பசுவை மட்டும் ‘கோமாதா’ என்று கொண்டாடுகிறார்கள் - தூக்கி நிறுத்துகிறார்கள்.


வருண பேதம் எங்கிருந்தாலும் அதனை எதிர்க்க வேண்டியவர்களாகவே மனிதநேயர்களான நாம் உள்ளோம்.

இவ்வளவுக்கும் பசுவைவிட அதிக பால் கொடுக்கக்கூடியது எருமை மாடுதான். பசு மாட்டுப் பாலைவிட எருமை மாட்டின் பாலில்தான் கொழுப்புச் சத்து (7.8 விழுக்காடு) அதிகம்!

மேலை நாடுகளில் எருமை மாட்டு இறைச்சிக் குத்தான் கிராக்கி அதிகம்.

எருமை மாட்டுக்குள்ள தனிக் கூடுதல் சிறப்பு - ஒவ்வொரு நாளுக்கும் அதன் எடை 700 முதல் 1500 கிராம் வரை கூடும். 14 முதல் 18 மாதங்களில் 300 கிலோ என்ற எடையை அடைகிறது.

இந்த வகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவைப்படும் எருமை மாடுகளை உதாசீனப் படுத்தும் போக்கு இந்தியாவில் மிகுந்து வருவதால், அதன் எண்ணிக்கை வீழ்ச்சி பெற்று வருகிறது.

இந்த நிலையில், வருண பேதம் காட்டி ஒதுக்கப் படும் - அதேநேரத்தில் மக்களுக்கும், நாட்டுக்கும், உடல் வளர்ச்சி - பொருளாதார வளர்ச்சி இவற்றிற்கும் அதிகம் தேவைப்படும் எருமை மாட்டைப் போற்றும் வகையில் வரும் மாட்டுப் பொங்கல் அன்று (16.1.2019) தனியார் இடங்களில் (வாய்ப்புள்ள ஊர்களில்) எருமை மாட்டு ஊர்வலம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கழகத் தோழர்களையும், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட பெருமக்களையும் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


வழக்கமான பொங்கல் வாழ்த்தோடு தனிச் சிறப்புடன் கறுப்பு மாட்டுப் பொங்கல் வாழ்த்தையும் சேர்த்துத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT