ADVERTISEMENT

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் தெரிந்த செங்கல் கட்டுமானம்; குவியும் பார்வையாளர்கள்

11:17 PM May 27, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் சிதிலமடையாத எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. கனமான கோட்டை சுற்றுச்சுவர்களுடன் கொத்தலம், அகலி ஆகியவை காணப்படுவதுடன் சுற்றிலும் செங்கல், கருப்பு; சிவப்பு பானை ஓடுகள், கல்வெட்டு, இரும்பு உருக்கு கழிவுகள், சுடுமண் குழாய்கள் வெளிப்பரப்பில் பரவிக் கிடக்கிறது. இதனை அகழாய்வு செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்தபோது, குறியீடுகள், தமிழி எழுத்துகளுடன் கருப்பு; சிவப்பு பானை ஓடுகள், மணிகள், வட்டச் சில்லுகள், ஆம்போரா உள்பட பல பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது தமிழ்நாடு அரசு அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ள நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு செய்ய தமிழ்நாடு அரசின் உத்தரவையடுத்து கடந்த 20ந் தேதி அப்போதைய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராஜா, சின்னத்துரை ஆகியோர் முன்னிலையில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.

அவர் பேசும் போது.. 'சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககால கோட்டையை இங்கே காண முடிகிறது. இங்கு அரண்மனை காணப்படலாம் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் தொல்லியல் துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி, இணை இயக்குநர் இரா.சிவானந்தம், தொல்லியல் ஆலோசகர் பேராசிரியர் க.ராஜன் ஆகியோர் வழிகாட்டுதல்படி பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குநர் த.தங்கதுரை மற்றும் ஆய்வு மாணவர்கள் நீராவி குளத்தின் மேற்கு பகுதியில் மேடாக உள்ள பகுதியில் செங்கற்கள், ஓடுகள் அதிகம் காணப்பட்ட அரன்மனைத்திடல் என்ற இடத்தில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அகழாய்வு தொடங்கி சில நாட்களிலேயே 7 செ.மீ முதல் 19 செ.மீ ஆழத்திற்குள்ளாகவே ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைத்தளங்களில் படங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் வட்டச் சில்லுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், கெண்டி மூக்குகளும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இந்த தகவல் வெளியான நிலையில் இளைஞர்கள் ஆர்வமாக அகழாய்வு நடக்கும் இடத்தைக் காண வந்து கொண்டிருக்கின்றனர். அகழாய்வு தொடங்கிய சில நாட்களிலேயே செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டிருப்பதால் இந்த கட்டுமானம் நீளமாக செல்வதால் இந்த இடத்தில் பெரிய கட்டடம் இருந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆய்வில் பெரிய அளவில் அகழாய்வு தகவல்கள் கிடைக்கும் கூறுகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT