தமிழ்நாட்டில் சங்ககால கோட்டைகளில் எஞ்சியுள்ள கோட்டைகளில் ஒன்று பொற்பனைக்கோட்டை. கொஞ்சமும் சிதிலமடையாத வட்டக்கோட்டை என்ற சிறப்பையும் பெற்றுள்ளது இந்த பொற்பனைக்கோட்டை. இந்த கோட்டையை பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் பார்த்து வியந்திருந்த நிலையில் 2012 ம் ஆண்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள்கோட்டைப் பகுதிக்குள் உள்ள நீராவி குளத்தில் பொதுமக்கள் துணி துவைக்கும் கல்லை மீட்டு ஆய்வு செய்த போது கி.பி. 2ஆம் நூற்றாண்டு சங்க கால தமிழ் பிராமி எழுத்துகளால் எழுதப்பட்ட கல்வெட்டு இருப்பதை பார்த்துள்ளனர்.

Advertisment

படைத் தலைவானக இருந்து வீரமரணம் அடைந்த 'கணங்குமரன்' உள்ளிட்ட வீரர்களுக்காக நடப்பட்ட நடுகல் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து பதிவு செய்தனர். இந்த நடுகல் பொற்பனைக்கோட்டை சங்ககால கோட்டை என்பதற்கான மிகப்பெரிய சான்றாக அமைந்துள்ளது. தொடர்ந்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தைசேர்ந்தஆய்வுக் குழுவினர் பல்வேறு இடங்களில் செய்த கள ஆய்வில் சங்ககால பிரமாண்ட வட்டக்கோட்டை சிதிலமடையாமல் உள்ளது.

Advertisment

கோட்டைக்கு வெளியே ஆயுதங்கள் செய்யும் உருக்கு ஆலைகளாக செயல்பட்ட சென்நாக்குழிகள் இருப்பதையும், ஈட்டி போன்ற ஆயுதங்கள் செய்ய பயன்படுத்திய சுடுமண் குழல்கள், உருக்கு கழிவுகள் இருப்பதையும் கள ஆய்வில் தெரிவித்ததுடன் இந்த கோட்டை மற்றும் அரண்மனை திடல் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் மூலம் வழக்கு தொடுத்து அகழாய்வுக்கான தீர்ப்பையும் பெற்றனர்.

தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி கிடைத்த நிலையில் பேராசிரியர் இனியன் தலைமையிலான குழுவினர் பல இடங்களை தேர்வு செய்து முதல்கட்டமாக கோட்டையின் மையத்தில் நீராவி குளத்திற்கு வடக்குப் பக்கம் அகழாய்வு செய்தனர். அகழாய்வில் சங்ககால பெரிய செங்கல்கள், செங்கல் நீர் போக்கி தடம், வட்ட சில்லு, அப்போரா உள்பட ஏராளமான பொருட்களை கண்டறிந்து ஆவணப்படுத்தினார்கள்.

Advertisment

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பொற்பனைக்கோட்டையை தொடர்ந்து அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து. தமிழ்நாடு அரசு மத்திய அரசு அனுமதிக்கு கோப்புகள் அனுப்பி அனுமதி கேட்டிருந்த நிலையில் அனுமதி கிடைத்துள்ளது. 2 ம் கட்ட அகழாய்விற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு செய்வதற்கான இடம் தேர்வு செய்யும் கள ஆய்வு பல நாட்கள் நடந்துள்ளது. இறுதியாக நீராவி குளத்திற்கு நேர் மேற்கில் 100 மீட்டர் தூரத்தில் உயரமான மேட்டுப் பகுதியை தேர்வு செய்துள்ளனர்.

அதாவது சுமார் 50 ஏக்கர் பரப்பளவை சுற்றியுள்ள வட்டக்கோட்டைக்குள் நீராவி குளம் அருகில் பழைய அரண்மனை இருந்ததற்கான அடையாளமாக அகழி அமைப்புடன் சுற்றிலும் வாய்க்கால், மேட்டுப் பகுதியில் பழமையான சங்ககால செங்கல்கள், பானை ஓடுகள், இரும்பு உருக்கு கழிவுகள் சிதறிக் கிடக்கிறது. இதனை இப்போதுவரை அப்பகுதி மக்கள் அரண்மனை திடல் என்றே கூறுகின்றனர். இந்த பகுதி அகழாய்விற்கு சரியான இடமாக தேர்வு செய்து சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அடையாளங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டக்கோட்டையின் அடித்தளம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டறியும் அகழாய்வுகளும் நடக்க வாய்ப்புகள் உள்ளது.

2 வது அகழாய்வின் முதல் கட்டமாக அகழாய்வுக்கான இடம் தேர்வு முடிந்து சுத்தம் செய்யப்பட்டு அடையாளங்கள் வைக்கப்பட்டு தயாராக உள்ளது. இந்த அகழாய்வில் சங்க கால தமிழர்களின் வரலாறும், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் பற்றி அறிய முடிமும் என்கின்றனர். அப்பகுதி ஊராட்சி நிர்வாகம், நில உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்களின் முழு ஒத்துழைப்பும் கிடைப்பதால் அகழாய்வுப் பணிகளும் சிறப்பாக நடக்கும் என்கிறார்கள்.