ADVERTISEMENT

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம்

10:33 AM Mar 11, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சம்பா பயிர் சாகுபாடியில் நெல் பயிர் லட்சக்கணக்கான ஹெக்டரில் தமிழ்நாடு முழுவதும் பயிர் செய்யப்பட்டுள்ளது. பயிர் செய்யப்பட்ட நெல்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க, இடைத்தரர்களை ஒழிக்க விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேளாண்மைத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல்கொள்முதல் மையம் அமைக்க அரசு முடிவு செய்தது. மாநிலம் முழுவதும் நெல்கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொரு தாலுகாவிலும் 5 இடங்கள், 6 இடங்களில் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் வாங்கப்பட்டு வருகின்றன.

இந்த நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் நெல் மூட்டைகளைக் கொண்டு வருவதற்கு முன்பு, இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகளின் ஆதார் எண், சிறுகுறு விவசாயிகள் பதிவு எண், மொபைல் எண் போன்றவற்றை பதிவு செய்து அதன்படி சம்மந்தப்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு சென்று விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளைத் தரவேண்டும். அதற்கு உண்டான தொகை நெல்மூட்டைகள் விற்பனையானபின் வழங்கப்பட்டுவிடும். இதற்கு யாராவது லஞ்சம் கேட்டால் சம்மந்தப்பட்ட தாலுகாவின் வட்டாச்சியரை தொடர்புகொள்ளவும் எனச் சொல்லப்பட்டு அதற்கான மொபைல் எண்களும் அறிவிக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் 54 கொள்முதல் நிலையங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 47 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. பெரணமல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மோசவாடி கிராமத்தில் அரசின் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எடைபோட்டு, அதனை லாரியில் ஏற்ற தற்காலிக தொழிலாளர்களை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இவர்களுக்கான தினசரி சம்பளத்தை நெல் கொள்முதல் நிலையமே வழங்க வேண்டும்.

இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டை ஏற்றும் பணிக்கு சில தொழிலாளர்களை அந்த கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்து அனுப்பியுள்ளார். அவர்களும் விவசாயிகளிடமிருந்த நெல் மூட்டைகளை எடை போட்டு, அதனை தைத்து, லாரியில் ஏற்றியுள்ளனர். இதற்காக ஒரு மூட்டைக்கு விவசாயிகளிடமிருந்து 40 ரூபாய் வசூலித்துள்ளார் ராமகிருஷ்ணன். அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயிடம் ஒரூ மூட்டைக்கு 40 ரூபாய் கேட்டுள்ளார். 40 ரூபாயெல்லாம் தரமுடியாது. ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் இல்லன்னா 20 ரூபாய் தருவன் என்றுள்ளார்.

அதற்கு ராமகிருஷ்ணன், “தரமுடியாதுன்னா, உன் மூட்டையை லாரியில் ஏத்த முடியாது உன்னால என்ன பண்ண முடியுமோ செய்துக்க” எனக் கோபமாக பேசியுள்ளார். “நீ எப்படி ஏத்தாம போறன்னு நானும் பார்க்கறன்” என விவசாயியும் பதில் சவால் விடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் அரசு வசூலிக்கச்சொல்லும் தொகையை விட கூடுதலாக வசூலிப்பதாக விவசாய சங்கள், விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வேளாண்மைத்துறை அதிகாரிகளோ, ஆதாரமிருந்தால் தாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம், பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லாதீர்கள் எனத் தெரிவித்துவருகின்றனர்.

தற்போது இந்த வீடியோ ஆதாரம் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என விவசாயிகள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT