Skip to main content

நெல் வயலில் மீன் வளர்ப்பு; லட்சத்தில் வருவாய் பார்க்கும் விவசாய தம்பதி

 

pudukkottai paramppur farmer couple fisheries for paddy field

 

வயல்களில் நெல் நடவு செய்து உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அறுவடை செய்த பிறகு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்பட்டு வட்டிக்கு கடன் வாங்கும் நிலை தான் இன்றளவும் இருக்கிறது. ஆனால், ஒரு தம்பதி நெல் நடவு செய்யும் வயலில் மீன் வளர்த்து அதிக லாபம் சம்பாதித்து வருவதுடன் ரசாயனக் கலப்பு இல்லாமல் நெல் அறுவடையும் செய்து சாதித்து வருகின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் ஊராட்சியில் உள்ள சின்ன கிராமம் சேந்தங்கரை. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பொன்னையா தான், தனது மனைவி பாக்கியலட்சுமியின் முழு ஒத்துழைப்போடு நெல் வயலில் மீன் வளர்த்து வருகிறார். தங்களிடம் உள்ள 12 ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கர் நெல் நடவுக்காகவும் 8 ஏக்கரில் நெல் நடவும் மீன் வளர்ப்பும் என மாற்றி மாற்றி செய்து வருகிறார்கள். வயலில் வரப்பு மட்டத்திற்கு தண்ணீரை நிரப்பி மீன் கண்மாய்களில் கிடக்கும் பாசிகளை கொண்டு வந்து வளர்த்து அதற்குள் மீன் குஞ்சுகளை விட்டு பராமரித்து வளர்ப்பதுடன் மீன்கள் பெரிதான பிறகு நேரடியாக பொதுமக்களிடம் மட்டுமே விற்பனை செய்த பிறகு, அந்த வயலில் ஒரு முறை மீன் வளர்ப்பை தொடர்ந்து உழவு கூட செய்யாமல் திருந்திய நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நெல்லுக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏதும் தெளிக்காமல், மீன் வளர்த்த வயல் என்பதால் இயற்கை சத்தில் நெல் விளைகிறது. இப்படியே மாற்றி மாற்றி நெல்லும் மீனும் வளர்க்கப்படுகிறது.

 

"2007 இல் இந்த முறையில் மீன் - நெல் வளர்ப்பை தொடங்கினோம். முதலில் மீனுக்கான தீவனங்கள் வாங்கி போட்டோம். பிறகு பாசிகள் மட்டுமே தீவனம். இந்த வேலைகளை எல்லாம் நானும் என் மனைவியுமே செய்கிறோம். தினசரி கவனிப்பது, மீன் பிடிப்பது எல்லாமே நாங்களே. வியாபாரிகளிடம் மீன் விற்பனை செய்வதில்லை. ஒரு கிலோ தொடங்கி 100, 200 கிலோ வரை நேரடியாக வரும் பொதுமக்களிடம் மட்டுமே விற்பனை செய்வதால் விலையும் குறைவதில்லை. வெளியூர் போகிறவர்களுக்கு ஆக்சிஜன் பாக்கெட்டில் மீன்கள் கொடுக்கிறோம். வருடத்திற்கு 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. நெல்லை விட மீனில் வருவாய் அதிகம் கிடைக்கிறது" என்கிறார் பொன்னையா. "கல்யாணத்திற்கு முன்பு எங்க வீட்ல இருக்கும் வரை நான் மீன் சாப்பிட கூட மாட்டேன். ஆனால், கல்யாணம் ஆன பிறகு என் கணவருடன் சேர்ந்து மீன் வளர்ப்பை முழுமையாகச் செய்து வருகிறேன். நிறைவான வருவாய் கிடைக்கிறது" என்றார் பாக்கியலட்சுமி.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !