ADVERTISEMENT

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் விடுவிக்கப்படும் சிறுவன்! -சிபிசிஐடி காவல்துறை பரிந்துரை!

11:12 PM May 10, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இளம்பெண்ணால் பாதிக்கப்பட்டது சிறார்கள்தான்! – விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் புதிய திருப்பம்!’ என்னும் தலைப்பில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைது செய்யப்பட்ட 8 பேரில் ஒருவனான 15 வயதுச் சிறுவன் அளித்துள்ள புகார், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இளம்பெண்ணே குற்றம் புரிந்தார் எனப் பூமராங்காக அந்தப் பெண் பக்கம் திரும்பியுள்ளதைச் சுட்டிக்காட்டியிருந்தோம். இந்நிலையில், இவ்வழக்கில் அச்சிறுவன் சிபிசிஐடி போலீசாரால் விடுவிக்கப்படலாம் எனத் தகவல் கசிந்துள்ளது.

விருதுநகரில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில், ஹரிஹரன், ஜுனத் அகமது, பிரவீன், மாடசாமி மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை, சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். மேலும், அந்த இளம்பெண், அவருடைய பெற்றோர், கைதானோரின் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர். சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில், பள்ளி மாணவர்களில் ஒருவர் மீது குற்றம் செய்ததற்கான எந்தவொரு ஆதாரமும், முகாந்திரமும் இல்லாத காரணத்தால், அம்மாணவனை மட்டும் வழக்கிலிருந்து விடுவிக்க முடிவெடுத்து, நீதிமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால், 7 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டு, விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஒரு சிறுவனை மட்டும் வழக்கிலிருந்து ஏன் விடுவிக்கின்றனர்?

‘18 நாள் சிறைவாசத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன். விருதுநகர் ஊரகக் காவல்நிலையப் போலீசார், இளவரான என்னைக் கட்டாயப்படுத்தி தவறாக வழிநடத்திய அந்தப் பெண் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அதனால், இந்த வழக்கில் போக்சோ நீதிமன்றம் தலையிட்டு, விசாரணை மேற்கொண்டு, அந்தப் பெண் மீது வழக்கு பதிவுசெய்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்கச் செய்யவேண்டும்.’ எனத் தமிழக முதல்வர் வரையிலும் அனுப்பிய புகார்தான், அச்சிறுவனை இந்த வழக்கிலிருந்து சிபிசிஐடி போலீசார் விடுவிப்பதற்கான காரணமாகப் பேசப்படுகிறது.

ஆதாரம் இல்லாமல் அவசரகதியில் ஏன் 15 வயதுச் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பவேண்டும்? அப்புறம் ஏன் வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT