ADVERTISEMENT

செல்வாக்கைப் பயன்படுத்தி பாபி சிம்ஹா வழக்குப் பதிவு செய்தார் - உசேன் பரபரப்பு

11:03 AM Sep 07, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

நடிகர் பாபி சிம்ஹா, கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டி வந்துள்ளார். கட்டுமான பணிகளைக் கொடைக்கானலைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஜமீர், காசிம் முகமது ஆகியோரிடம் கொடுத்துள்ளார். இதற்காக அவர்களுக்கு பெரிய தொகை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதிகப் பணம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் வீட்டைக் குறைந்த பணத்தில் கட்டி வந்ததாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் கொடைக்கானல் சென்ற பாபி சிம்ஹா, இது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட, பின்பு வீட்டுப் பணிகளை ஒப்பந்ததாரர்கள் பாதியிலே போட்டுவிட்டதாகப் பேசப்படுகிறது. மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக இருந்த மகேந்திரன் என்பவர் சமூக ஆர்வலர் எனச் சொல்லிக் கொண்டு வீடு கட்டுவது தொடர்பாக பாபி சிம்ஹாவிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீது கொடைக்கானல் காவல் நிலையம் மற்றும் கொடைக்கானல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் பாபி சிம்ஹா புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஒப்பந்ததாரர்கள் ஜமீர், காசிம் முகமது அவர்களுக்கு ஆதரவாக இருந்த உசேன், மகேந்திரன் உள்ளிட்டோர் மீது கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், உசேன் என்பவர் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘நான் சென்னை மற்றும் கொடைக்கானலில் கடந்த 30 வருடமாக ரிஸாட் நடத்தி வருகிறேன். இந்நிலையில், என் நண்பரும் நடிகருமான பாபி சிம்ஹா, என் மீது பொய் புகார் கூறி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்குப் பதிவு செய்துள்ளார்’ என்றார். மேலும், இது தொடர்பாக அவர் சில ஆவணங்களையும் வெளியிட்டார்.

சமீபத்தில் பாபி சிம்ஹா மீது, அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்று மாடிக் கட்டடம் கட்டி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT