ADVERTISEMENT

தடையை மீறிய பாஜகவினர்..! கைது செய்த காவல்துறையினர்! 

03:39 PM Jun 15, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்தியில் பாஜக அரசின் எட்டு ஆண்டுகால ஆட்சியை கொண்டாடும் விதமாக கரூர் மாவட்ட பாஜக சார்பில் இருசக்கர வாகன பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இந்தப் பேரணியை பாஜக கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா துவக்கி வைக்க இருந்தது. 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டு இருசக்கர வாகன பேரணி துவங்க இருந்த நிலையில், காவல் துறையினர் இதற்கு அனுமதி மறுத்தனர். இதன் காரணமாக இரண்டு ஏ.டி.எஸ்.பி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவினர், காவல் துறையின் தடையையும் மீறி இருசக்கர வாகன பேரணியை நடத்தினர். காவல்துறையினர் தடுப்புகள் அமைத்திருந்த நிலையில், மாற்று வழிகளில், காட்டுப்பாதையில் பாஜகவினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, நான்குக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

காவல்துறை அதிகாரிகளிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. முன்னதாக தடையை மீறி இருசக்கர வாகன பேரணி துவங்க இருந்த இடத்திலேயே பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாவட்ட இளைஞரணி தலைவர் தீன சேனன் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.


காவல்துறை அனுமதி மறுத்தும், தடுப்புகளை மீறி கரூர் மாநகரில் பல்வேறு வழிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக, பாஜகவினர் இருசக்கர வாகன பேரணி நடத்தியதால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கரூர் மாநகரில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT