ADVERTISEMENT

யானைக்குட்டியை பிரிந்திருந்த பெள்ளி; ஓராண்டுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்

12:05 PM Mar 14, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

கோப்புக்காட்சி

ADVERTISEMENT

உலக அளவில் சினிமா துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதை சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவில் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் பெற்றது. இது தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்த பொம்மன், பெள்ளி என்ற இரு பழங்குடிகளைப் பற்றிய கதை.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஓசூர் வனப்பகுதியில் இருந்து தாயை பிரிந்த குட்டியானை பொம்மி முதுமலை யானைகள் முகாமுக்கு அழைத்துவரப்பட்டது. இந்த குட்டியானைக்கு பழங்குடி இனத்தை சேர்ந்த பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பாகனாக இருந்து தங்களது பிள்ளை போன்று வளர்த்து வந்தனர். குட்டி யானைக்கும் தம்பதியினருக்கும் இடையே ஏற்பட்ட பாசப்பிணைப்பினை 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற பெயரில் ஊட்டியைப் பூர்விகமாகக் கொண்ட ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி இயக்கியிருந்தார். இந்தப் படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றிருந்த நிலையில், இறுதியாக ஆஸ்கர் விருதையும் வென்றது.

இந்த நிலையில், இந்த ஆவணக் குறும்படத்தில் இடம்பெற்ற பெள்ளி, தான் வளர்த்த பொம்மி யானையை ஓராண்டிற்குப் பிறகு நேரில் சென்று தொட்டுப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார். ஓராண்டுக்கு முன்பு வரை குட்டியானை பொம்மியை பொம்மன், பெள்ளி தம்பதியினர் வளர்த்து வந்த நிலையில், நிர்வாகம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வேறு யானையின் பாகனாக பொம்மன் மாற்றப்பட்டார். மேலும், தற்காலிகமாக வேலை பார்த்து வந்த பெள்ளியும் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வானதால் பிரபலமான பெள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது. இந்த நிலையில், குட்டியானை பொம்மியை நேரில் சந்தித்து முத்தமிட்டு பெள்ளி ஆனந்தக் கண்ணீர் வடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாய் இருந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT