ADVERTISEMENT

’92’ கதைதான் ‘96’ படமா? பாரதிராஜா, சுரேஷ் குற்றச்சாட்டுக்கு பிரேம்குமார் விளக்கம்

05:13 PM Nov 01, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT


விஜய்சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படம் இன்னொரு ஆட்டோகிராப் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டது. வசூலிலும் சாதனை படைத்துள்ளது இப்படம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் குற்றம் சாட்டுகிறார். ‘92’, ‘பாரதி என்கிற பால்பாண்டி’ என்ற பெயரில் தான் எழுதி வைத்திருந்த கதைதான் ‘96’ஆக வெளிவந்துள்ளது. அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திற்கு பிறகு எனது இந்த கதையை என் குருநாதர் பாரதிராஜேவே இயக்குவதாக இருந்தார். அதனால்தான் பாரதி என்றும், அவரது செல்லப்பெயரான பால்பாண்டி என்றும் தலைப்பு வைத்திருந்தேன். என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்துதான், என் காதலியை மனதில் வைத்துதான் இக்கதையை எழுதியிருந்தேன். ’ஓம்’ உட்பட பல படங்களில் இயக்குநர் பாரதிராஜா சார் பிஸியாக இருந்ததால் இப்படம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. கடைசியாக விஜய்சேதிபதியை வைத்து இயக்க வேண்டும் என்றும் ’சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, ‘அசுரவதம்’ படங்களை இயக்கிய இயக்குநர் மருதுபாண்டியன் மூலம் இக்கதையை விஜய்சேதுபதிக்கு சொல்ல முயன்று வந்தேன். ஆனால், விஜய்சேதுபதி நடிப்பிலேயே இக்கதை பிரேம்குமாரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது. ஒரு சில மாற்றங்களைத்தவிர என் கதையில் உள்ள 90 சதவிகிதம் 96 படத்தில் உள்ளது என்று குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார் சுரேஷ்.

நடந்த அத்தனைக்கும் நானே சாட்சி என்று இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் கூறியுள்ளார். மேலும், கதைத்திருட்டை பிரேம்குமார் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், திரைத்துறையின் முக்கிய நபர்களை வைத்து பேசித்தீர்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT


இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவருடன் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் ஆகியோருன் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில்,‘இந்த கதை என்னுடையது தான். இந்த கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில்‘96’என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்கு பிற்கு தயாரிப்பாளர் நந்தகோபாலிடமும் சொன்னேன். அவர் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிய பிறகு தான், அந்த கதைக்கான விவாதத்தைத் தொடங்கினேன். அதில் இயக்குநர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.


இந்த படத்தின் டைட்டில் 96 என்று வைத்து டிசைன் செய்து விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும் வரை நிறைய முறை விளம்பரப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை.

படம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து விச்சு என்பவர் சமூக வலைதளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து சுரேஷ் என்பவர் இந்த கதை என்னுடையது என்றும், இயக்குநர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன் என்றும், அவர் தான் இந்த கதையை இயக்குநர் பிரேம்குமாரிடம் சொல்லி படமாகியிருக்கிறது என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

ஒரே கதையை எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்? சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது மற்றும் அசுரவதம் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் மருது பாண்டியன் மீது, பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் உறுதியாக கூறுகிறேன்.

இந்த கதையை முதல் முறையாக என்னுடைய குறிப்பேட்டிலும், இரண்டாவது முறையாக என்னுடைய கைப்பட எழுதி பைண்டிங் செய்யப்பட்ட ஃபைலும் உள்ளன. இதன் பின்னர் தான் இந்த கதையைப் பற்றி அவரிடம் கூறினேன். இந்த கதையைக் கேட்டவுடன் அவர் ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் 92 என்ற டைட்டிலில் கதையை கேட்டதாகச் சொல்லவேயில்லை. கதை விவாத்தின் போது அவர் உடனிருந்தார். அப்போதும் சொல்லவில்லை. அவர் கதையை திருடியிருந்தால், அந்த கதையை அவரே இயக்கியிருக்கலாமே.. ஏன் மற்றொரு இயக்குநரிடம் கொடுத்து இயக்கசொல்லவேண்டும்?


இந்த படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பதும், கதை களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப்பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குற்றச்சாட்டு அல்ல. கதையை திருடியவர் கதையின் நாயகி பெயரை மாற்றியிருக்கலாம், கதை களத்தின் இடத்தை மாற்றியிருக்கலாம் .. இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் போது, இந்த படத்தில் அப்படியே பயன்படுத்துவார்களா,,?

இது போன்ற பிரச்சினைகளை பேசி தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்றொரு சங்கம் இருக்கிறது. அதற்கு இயக்குநர் கே பாக்யராஜ் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம் அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்திருக்கலாம். இதையெல்லாம் விடுத்து மாற்று பாதையை தேர்ந்தெடுத்து, படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா? என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக சுரேஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டில் மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார். தொழில்நுட்ப குழுவினரின் உதவியுடன் அத்தகைய ஆதாரங்கள் அவர்கள் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கதை திருட்டு தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்தும் போது தங்களுடைய கதை இது தான் என்ற ஆதாரத்தை வெளியிடவேண்டும். ஆனால் அப்படியொரு ஆதாரத்தை சுரேஷ் என்பவர் இது வரை முன்வைக்கவில்லை. இவர்கள் யாரும் ‘96’ கதை தொடர்பான நம்பகத் தன்மைக் கொண்ட எந்த ஆதாரங்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை. இதிலிருந்து அவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியவருகிறது.’என்று இயக்குநர் பிரேம்குமார் விளக்கம் அளித்திருக்கிறார்.‘

இது குறித்து உதவி இயக்குநர் மணி வில்லன் என்பவர் பேசுகையில்,‘சுரேஷ் என்பவர் மருது பாண்டியன் அவர்களிடம் 92 என்ற கதையைச் சொல்லும் போது நானும் உடனிருந்தேன். அவர் கூறிய கதையில் ஸ்கூல் போர்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தது, அது இதில் இல்லை. அவருடைய கதையும், இவருடைய கதையும் வேறு வேறு. அவருடைய கதையின் நாயகன் வேறு, இந்த கதையின் நாயகன் வேறு’என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT