ADVERTISEMENT

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஜாமீன்; நீதிபதி அறிக்கை தர உத்தரவு

02:37 PM Jan 02, 2024 | mathi23

பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 ஆண்டுகளாக துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக துணைவேந்தரே தனி நிறுவனம் தொடங்கியிருப்பது விதிமீறல் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். பெரியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஸ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் ஆகிய மூவருடன் இணைந்து பூட்டர் (Periyar University Technology entrepreneurship and Research Foundation) என்ற தனி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அரசு செலவில் அலுவலர்களைப் பயன்படுத்தியது, தனி நிறுவனங்களைத் தொடங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தனர்.

ADVERTISEMENT

அதே சமயம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி, கூட்டுச்சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. போலீசாரின் விசாரணையை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்ரேட் தினேஷ்குமார், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான வழக்கு இன்று (02-01-24) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதாக கூறிய மாஜிஸ்திரேட், நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்தது தவறு. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்துள்ளதால் சிறப்பு நீதிமன்ற அதிகாரத்தை மாஜிஸ்திரேட் எடுக்க முடியாது என வாதிட்டது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் தனிநபர் சுதந்திரம் சம்பந்தப்பட்டுள்ளதால் துணைவேந்தர் தரப்பு வாதங்களையோ, பாதிக்கப்பட்ட புகார்தாரார் தரப்பு வாதங்களையோ கேட்காமல் இந்து மனு மீது உத்தரவு பிறப்பிப்பது முறையாக இருக்காது என்று கூறி, ஜனவரி 12ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி துணைவேந்தர் தரப்புக்கு உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் வழங்கியது தொடர்பாக விரிவான தாக்கல் செய்யும்படி மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT