ADVERTISEMENT

500 கிராம் எடையில் குறைமாதத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்... அரசு மருத்துவர்கள் சாதனை

03:18 PM Oct 05, 2019 | santhoshkumar

இந்தியாவிலேயே குறைந்த எடையில் வெறும் 500 கிராமில் குறைமாதத்தில் பிறந்துள்ள குழந்தையை மிக சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றியிருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


145 நாட்கள் பாதுகாத்து இரண்டு கிலோ 200 கிராம் எடையுடன் அந்த குழந்தையை தாயிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை உண்டாக்கிவருகிறது.

நாகப்பட்டினத்தில் உள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வமணி, லதா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு செப் 21ம் தேதி திருமணம் ஆனது. லதாவிற்கு முதல் கருத்தரிப்பு கலைந்துப்போன நிலையில் 2 வதாக குழந்தை உருவாகி, பிரசவத்திற்காக மே மாதம் 10ம் தேதி, நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். சுக பிரசவத்தில் 580 கிராம் மட்டுமே எடையுடைய பெண் குழந்தை பிறந்ததோடு, எவ்வித அசைவும் இல்லாமல் இருந்ததால் குழந்தை இறந்து பிறந்துள்ளதாக மருத்துவர்களும் உறவினர்களும் கருதி சோகத்தின் உச்சத்திற்கு ஆளாகினர்.

அப்போது பணியில் இருந்த மகப்பேறு மருத்துவர் ஒருவர் செயற்கை சுவாச கருவி வாயிலாக முயற்சித்துப்பார்க்கலாம் என குழந்தையை , வென்டிலேட்டர், செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு ‘பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு மாற்ற செய்தார். அங்கு குழந்தை மருத்துவர் மற்றும் செவிலியர்களின் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில், ஒவ்வொரு நொடியும் குழந்தையின் மாற்றத்தை கணக்கில் கொண்டு தீவிர சிகிச்சை அளித்தனர். 145 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த குழந்தை 2 கிலோ 200 கிராம் எடையுடைய துரு துரு குழந்தையாக வளர்ந்ததை கண்டு அனைவரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

இதுகுறித்து நாகை குழந்தை மருத்துவர் ஜெயச்சந்திரனும், 145 நாட்கள் குழந்தையின் தாயாக இருந்து பராமரித்த செவிலியர் சத்யாவும் கூறுகையில் ," 580 கிராம் உடைய குழந்தைக்கு மூச்சு விடுதல், விழுங்குதல் போன்ற எதுவும் தெரியாது. அக்குழந்தைக்கு செயற்கை முறையில் சிகிச்சை அளிப்பதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டோம். 24 மணி நேரமும் அந்த குழந்தையை எங்கள் குழந்தையைபோல நினைத்து அந்த குழந்தை மீது தனி கவனம் செலுத்தினோம். தற்போது குழந்தை முழு சுகம் பெற்று வீடு திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது, எங்கள் உழைப்புக்கு கிடைத்த மகத்தான பலன்," என்கிறார்கள்.

மேலும் செவிலியர்கள் கூறுகையில், "குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால், நிம்மதி இல்லாமல் இருந்தோம் ஆனால், மருத்துவர்கள் காப்பாற்றி விட்டார்கள். அவர்களுக்கு எங்களால் முடிந்த முழு ஒத்துழைப்பைக்கொடுத்தோம், இப்போது ஏதோ சாதித்துவிட்டதைப்போலவே நிம்மதி அடைகிறோம்," என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.

குழந்தையின் தாய் லதா கூறுகையில், "இந்தியாவிலேயே உடல் எடை குறைவாக குறை மாத பிரசவத்தில் காப்பாற்றப்பட்ட மூன்றாவது குழந்தைன்னு என்னோட குழந்தைன்னு சொல்லுறாங்க. அதுவும் அரசு மருத்துவமனையில் நடந்திருப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இந்த சாதனையை ஒருபோதும் மறக்கமாட்டேன்" என்கிறார்கள். குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT