ADVERTISEMENT

ஆத்தூர்: பெண் காவலரின் சட்டையைப் பிடித்து ரகளை; திமுக பிரமுகர் கைது!

10:24 PM Apr 19, 2019 | elayaraja


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மோட்டூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி சசிகலா (35). இரண்டு மகன்கள் உள்ளனர். ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் இரண்டாம்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார்.

ADVERTISEMENT


இந்நிலையில், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அக்கிசெட்டிப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் 97ம் எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவையொட்டி, ஏப்ரல் 18ம் தேதி, காவலர் சசிகலா அந்த வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

ADVERTISEMENT


பகல் 3 மணியளவில் வாக்குப்பதிவு ஓரளவு மந்தமாக இருந்தது. அப்போது வாக்குச்சாவடிக்கு வெளியே ஒரு அரசமரத்தடி நி-ழலில் குடிபோதையில் இருந்த சிலர், கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு விடும் சூழல் உள்ளதாக காவல் பணியில் இருந்த சசிகலாவுக்கும், வாக்குச்சாவடி அருகே இருந்த கிராம நிர்வாக அலுவலர் சாந்திக்கும் தகவல் கிடைத்தது.


அதையடுத்து சசிகலா, அந்த கும்பலை சத்தம் போட்டு விரட்டி அடித்தார். பின்னர் அவர் வாக்குச்சாவடிக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு வாலிபர், காவலர் சசிகலாவை பார்த்து, 'ஏய் நீ எந்த ஊருக்காரிடி?' என்று கண்ணியக்குறைவாக கேட்டு கூச்சல் போட்டார். இதனால் கோபம் அடைந்த அவர், அந்த வாலிபரை கடுமையாக எச்சரித்தார். அப்போது திடீரென்று அந்த வாலிபர் சசிகலாவின் காக்கி சீருடையை முன்பக்கமாகப் பிடித்து இழுத்தார். கையை எடுக்கச் சொன்ன பிறகும் வாலிபர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருந்தார்.


ஊர்க்காரர்கள் சிலர், சட்டையில் இருந்து கையை எடுக்கும்படி வாலிபரை பிடித்து இழுத்தனர். அப்படியும் அவர் சட்டையை வலுவாக பிடித்துக் கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த காவலர் சசிகலா, அந்த வாலிபரின் கையைப் பிடித்து கடித்தார். அதன்பிறகே அவர் சட்டையில் இருந்து கையை எடுத்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


பலர் முன்னிலையில் தன்னை அசிங்கப்படுத்திய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் சசிகலா புகார் அளித்தார். விசாரணையில், அந்த வாலிபர் அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய் (28) என்பதும், தந்தையை விட்டு தாய் பிரிந்து சென்று விட்டதும், சம்பவத்தின்போது அவர் குடிபோதையில் இருந்ததும், திமுக பிரமுகர் என்பதும் தெரிய வந்தது.


அந்த வாலிபர் மீது இ.த.ச., பிரிவுகள் 294 பி (ஆபாசமாக பேசுதல்), 353 (பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (1) (கொலை மிரட்டல்) மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 19ம் தேதி மாலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


குடிபோதையில் வாலிபர் ஒருவர், பணியில் இருந்த பெண் காவலரின் காக்கி சட்டையை முன் பக்கமாக பிடித்து இழுத்தபடி மல்லுக்கட்டியிருக்கிறார். அவர் மீது மானபங்கம் செய்தல் (பிரிவு 354) போன்ற பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்திருப்பது ஏன் என்று தெரியவில்லை என சக காவலர்களே கேள்வி எழுப்பியுள்ளனர்.


காவலர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி:


வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள துணை ராணுவத்தினருக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல், கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தடுக்க இதுபோன்ற பணிகளின்போது ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதேநேரம், உள்ளூர் காவல்துறையினர் கையில் மரத்தடியோ, பைபர் லட்டிகள் கூட எடுத்துச்செல்லக் கூடாது என்று உத்தரவிடப்படுகிறது.

இதுபோன்ற சூழல்களில், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் காவல்துறையினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குக் கூட அவர்களிடம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது பெரும் அதிருப்தியை காவல்துறையில் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT