ADVERTISEMENT

‘விளையாட்டு வீரர்களின் கவனத்திற்கு’ - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

11:48 PM Oct 05, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக விளையாட்டு வீரர்கள், அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகளில் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்கள் தகுதியானவர்கள் ஆவர்.

தேசிய அளவிலான போட்டிகளான, தேசிய விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்களாகக் கருதப்படுவர். மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகளில் மட்டுமே தகுதியான போட்டிகளாகக் கருதப்படும். அதே சமயம் இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்களாகக் கருதப்படுவர்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் 01.01.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாகக் கருதப்படும். மேலும் 40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்நாட்டினை சார்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் மேற்காணும் வழிகாட்டுதலின்படி 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் 31.10.2023 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பித்திடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT