ADVERTISEMENT

கல்லூரிக்கே வராதவர்களுக்கு வருகைச் சான்றிதழ்! போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய சட்டக் கல்லூரி முதல்வர் கைது! 

05:11 PM Jan 25, 2020 | kalaimohan

போலி வழக்கறிஞர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் உருவாகக் காரணமாக இருந்த, ஆந்திர மாநில தனியார் சட்டக் கல்லுாரி முதல்வரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சங்கத்தின் செயலாளராக இருப்பவர் ராஜா குமார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், வில்லிவாக்கம், ராஜாஜி நகர் வேகவதி தெருவைச் சேர்ந்த 59 வயதான விபின் ரயில்வே ஊழியர் ஆவார். இவர், ரயில்வே துறையில் பணிபுரிந்தபடி, ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள, தனியார் சட்டக் கல்லுாரியில், 2015 - 18ம் ஆண்டு வரை, எல்.எல்.பி., படித்துள்ளார். சட்டக் கல்லுாரி தேர்வு எழுதுவதற்கு, குறைந்தபட்சம் 70 சதவீதம் வருகைப் பதிவேடு கட்டாயம் ஆகும். விபின் ரயில்வே துறையில் பணியாற்றி வந்ததால், கல்லுாரிக்குச் செல்ல முடியவில்லை. ஆனால், கல்லுாரிக்குச் சென்றதுபோல், போலியாக வருகைப் பதிவேடு சான்றிதழ் பெற்று, சட்டப் படிப்பை முடித்துள்ளார். இவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில், வழக்கறிஞராகப் பதிவு செய்ய விண்ணப்பித்தார். அதை நிராகரித்து விட்டோம். இதனால் விபின், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான உலகநாதன், மோகன்தாஸ் ஆகியோருக்கு, பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளார். 2017-ல், ரயில்வே துறையில் இருந்து விருப்ப ஓய்வும் பெற்றுள்ளார். இவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புகார் குறித்து, சென்னை உயர்நீதிமன்ற காவல்நிலைய போலீசார் விசாரித்து, விபின், உலகநாதன் மற்றும் மோகன்தாஸ் ஆகியோரைக் கைது செய்தனர். அதன் பிறகு, இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த மோசடி குறித்து, கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அப்போது, ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள தனியார் சட்டக் கல்லுாரி முதல்வர் ஹிமவந்த குமார் என்பவர், கல்லுாரிக்கே வராத ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, 80 சதவீதம் கல்லுாரிக்கு வருகை தந்தது போல பதிவேடு தயார் செய்து, சான்றிதழ் வழங்கியுள்ளார். இதற்கு, கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது. இவர் வழங்கிய சான்றிதழ் வாயிலாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்கள் உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, ஹிமவந்த குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT