ADVERTISEMENT

சொத்துக்குவிப்பு வழக்கு; வருத்தம் தெரிவித்த நீதிபதி

11:49 AM May 17, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை துறைமுகத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை டெல்லியை சேர்ந்த ராஜீவ் கோலி என்பவர் பைலட், டாக் மாஸ்டர் மற்றும் ஹார்பர் மாஸ்டர் போன்ற பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்தார். அவ்வாறு பணியாற்றும் போது 10 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 27 லட்சத்து 23 ஆயிரத்து 475 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக கூறி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும் இந்த மதிப்பானது அவரது வருமானத்தை விட சுமார் 71 சதவீதம் அதிகமானது என சிபிஐ தெரிவித்து இருந்தது.

கடந்த 2004 ஆம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக 113 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை நீதிபதி முன்பு அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.மெஹபூப் அலி கான் பிறப்பித்துள்ள தீர்ப்பில் சிபிஐ மற்றும் ராஜீவ் கோலி ஆகியோர் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், வருமான விவரங்கள் மற்றும் வருமான வரி கணக்குகளின் அடிப்படையில் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட ஆண்டுகளில் ராஜீவ் கோலி 26 லட்சத்து 53 ஆயிரத்து 270 ரூபாயை ஊதியமாகவே பெற்றுள்ளார். மேலும், இந்த ஊதிய வருமானம் மட்டுமின்றி பிற சொத்துக்கள் மூலமாகவும் அவருக்கு வருமானம் கிடைத்துள்ளது.

இந்த காலகட்டத்தில் அவரது செலவுகளையும் கணக்கிட்டு 4 லட்சத்து 73 ஆயிரத்து 683 ரூபாய் மட்டுமே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இது அவரது வருமானத்தை விட சுமார் 9 சதவீதம் மட்டுமே அதிகம். இது மட்டுமின்றி பணியில் சேர்ந்தது முதல் ராஜீவ் கோலிக்கு சேமிப்பு பழக்கமும் இருந்துள்ளது. எனவே, 27 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக கூறிய குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கவில்லை எனக் கூறி ராஜீவ் கோலியை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

மேலும், வருமானம் மற்றும் சொத்துகளை கூடுதலாக மதிப்பீடு செய்யாமல் முறையான வகையில் மதிப்பீடு செய்திருந்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டிய தேவை இருக்காது. இதன் மூலம் ராஜீவ் கோலியின் 20 ஆண்டுக்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்காது. இந்த தாமதத்திற்கான பழியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. இந்த வழக்கில் நீதி வழங்க 20 ஆண்டுக்காலம் ஆனதற்கு நீதிமன்றம் தனது வருத்தத்தை பதிவு செய்கிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT