ADVERTISEMENT

முதுகுத் தண்டுவட பாதிப்பால் அவதியுறும் நோயாளிக்கு உதவும் அரியலூர் சமூக ஆர்வலர்கள்

05:46 PM May 05, 2020 | Anonymous (not verified)



அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கடைக்கோடி கிராமமான பளிங்காநத்தம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான வெங்கடேசன்(42) என்பவர் கடந்த 18 ஆண்டுகளாக கொத்தனார் வேலை பார்த்து வந்தார். கூலித்தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி புவனேஸ்வரி (38) வீட்டு வேலையை கவனித்து வருகிறார். மேலும் வெங்கடேசனுடைய மகன்கள் இருவரில் ஒருவர் மணி பாரதி டிப்ளமோ மெக்கானிக் (20) படித்து முடித்து கரோனா ஊரடங்கு முடிந்ததும் வேலைக்கு செல்ல காத்திருக்கிறார்.

ADVERTISEMENT


இரண்டாவது மகனான மணி பாலாஜி (16) அரியலூர் மாவட்டம் தத்தனூரில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு டிப்ளமோ எலெக்ட்ரீசியன் படிக்கிறார்.

வெங்கடேசன், கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் வரை கால் நடக்க முடியாமல் அவதியுற்று வந்துள்ளார். திடீரென்று நடக்க முடியாத சூழல் வந்தவுடன் மார்ச் 23 அன்று திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை முடிவில் தனது முதுகுத்தண்டுவடத்தில் ஒரு பகுதி நொறுங்கியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். காப்பீடு அட்டை விண்ணப்பிக்க முயற்சிக்கும்வரை பொறுக்க முடியாது என மருத்துவர்கள் கூற, தனது உறவினர்கள் மூலம் மற்றும் நண்பர்கள் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து வெங்கடேசனிடம் கேட்டபோது, என்னையே நம்பியிருந்த குடும்பத்திற்கு நான் ஒருவனே சம்பாதித்து குடும்பத்தை கவனித்து வந்தேன். இப்போது என்னால் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளேன். எனது பிள்ளைகளின் படிப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனது மருத்துவச் செலவுக்கும் மருந்து, மாத்திரைகள் வாங்கவும் வாரம் ஒரு முறை மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டியுள்ளது.

தற்போதுள்ள எனது பொருளாதார சூழலில் அடுத்த வேளை சோறுக்கே வழியில்லை. எனவே எனது மருத்துவச் செலவை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எனது உடல் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையிலும் மாதந்தோறும் 5000 ரூபாய் மருத்துவச் செலவுக்கான உதவியோ அல்லது மருந்துகளாகவோ வழங்கிடவும், மருந்து வாங்கிட திருச்சி சென்று வர போக்குவரத்துக்கும் உதவ வேண்டும்.

மேலும் குடும்பத்துக்கு தேவையான உணவுப்பொருட்களையும் வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து நேரில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடியாத காரணத்தால், பளிங்காநத்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சங்கர் மூலமாக மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர்கள் தங்க. சண்முக சுந்தரம், சின்னத்துரை ஜான் ஆகியோர் முதுகுத்தண்டுவட பாதிப்பால் அவதியுறும் வெங்கடேசனை சந்தித்து ஆறுதல் கூறி தங்களால் இயன்ற ஆயிரம் ரூபாய் நிதி உதவியினை அளித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT