Ariyalur father son issue police searching rajenthiran

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜா (30). ராஜா திருமணத்திற்கு முன்பு குடிப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். இந்த நிலையில், அவரது தந்தை உட்பட குடும்பத்தினர் ராஜாவுக்கு திருமணம் செய்து வைத்தால், மகன் திருந்திவிடுவார் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவுக்கு மோகனப்பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

Advertisment

தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண்குழந்தை, எட்டு மாத பெண் கைக்குழந்தை என இரு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு மனைவி பிள்ளைகளை பொறுப்போடு கவனித்து வந்த ராஜா, பிறகு குடிக்க ஆரம்பித்துள்ளார். சம்பாதிக்கும் பணத்தை குடித்துவிட்டு வருவதோடு, வீட்டிலும் வம்பு சண்டை வளர்ப்பது, அக்கம் பக்கம் வீடுகளில் வம்பு சண்டை வளர்ப்பது என இருந்துள்ளார் ராஜா.

Advertisment

அவ்வப்போது ராஜாவின் தந்தை ராஜேந்திரன் மகனைக் கண்டித்து வந்துள்ளார். ஆனால், ராஜா திருந்தவில்லை. நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ராஜா, முழு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். வந்ததடன் வீட்டில் இருந்தவர்களிடம் சண்டை வளர்த்துள்ளார். இதனால் கோபமடைந்த ராஜாவின் தந்தை ராஜேந்திரன், மகனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோபம் அதிகமான ராஜேந்திரன், வீட்டில் இருந்த கடப்பாரை கம்பியை எடுத்து தனது மகன் ராஜாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார் ராஜா. மகன் அப்படி கிடந்ததைப் பார்த்த தந்தை ராஜேந்திரன் எங்கேயோ தலைமறைவாகியுள்ளார். இந்த தகவல் உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கலை கதிரவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். குடிபோதையில் வந்த மகனை கோபத்தின் காரணத்தால் தந்தையே கடப்பாரையால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான ராஜேந்திரனை தேடிவருகின்றனர்.