ADVERTISEMENT

‘நம்மவர்’ நல்லவரா? அரசியலிலும் நடிப்பா? -கமல் மீது பாயும் சந்தேகக் கணைகள்! 

10:54 PM May 19, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்ல பார்வையாளர் பதிவேட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் எழுதிய குறிப்பு இது -
‘கல்லா மேதை இல்லத்தில் கல்லா ரசிகன் கமல்ஹாசன்’

ADVERTISEMENT


‘காமராஜரைப் போலவே நானும் படிக்கவில்லை; அவர் போலவே அரசியல் தலைவராகி இருக்கிறேன்’ என்ற எண்ண ஓட்டத்தில், கமல்ஹாசன் இப்படி எழுதியிருப்பாரோ என்னவோ?


எந்தத் தலைவரின் சாயலும் இல்லாமல், அரசியல் தளத்தில் தன்னை வேறுபடுத்திக் காட்டி வருகிறார் கமல்ஹாசன். அவரது நடவடிக்கைகளும் வித்தியாசமாகவே இருக்கின்றன.


மாலை நேர மழையைப் பொருட்படுத்தாது சிவகாசி பேருந்து நிலையத்துக்கு அருகில் சிலர் திரண்டிருந்தனர். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு ‘பாய்ண்ட்’ என்பதால், தூறல் விழுந்த நிலையிலும் அங்கு வந்தார் கமல்ஹாசன். நிறைய பேசுவார் என்று எதிர்பார்த்தது கூட்டம். அவரோ ஒரு நிமிடம்கூட பேசவில்லை.

அந்தப் பேச்சிலும் “நமது கொண்டாட்டங்களோ, கோலாட்டங்களோ, எதார்த்த வாழ்க்கைக்கு இடைஞ்சல் இல்லாமல், மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நடக்க வேண்டும். இங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நின்றுகொண்டிருக்கின்றீர்கள். நமக்கு கடமை இருக்கிறது. இங்கே சாலையில் நம்மைக் கடந்து செல்பவர்கள், அவரவர் வேலையையும் கடமையையும் செய்வதற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இடையூறாக மக்கள் நீதி மய்யம் இருக்கக்கூடாது. அதனால், உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.” என்று பேசிவிட்டுக் கிளம்பினார்.


தேசபந்து மைதானம் நிரம்பி வழிந்தது. மற்ற அரசியல் தலைவர்கள் என்றால், ‘ஆஹா.. இவ்வளவு கூட்டம் இருக்கிறதே! நீண்ட நேரம் பேசி, மக்கவிருதுநகரில் ளை ஈர்த்து, வாக்குகள் ஆக்கிவிடுவோம்!’ என்றுதான் கணக்கு போட்டிருப்பார்கள். கமல்ஹாசனோ, சரியாக 8 நிமிடங்கள் மட்டுமே பேசினார். கூட்டத்தினருக்கோ ஏமாற்றம். “நல்லா பேசுவாருன்னு பார்த்தா.. சட்டுபுட்டுன்னு பேசிட்டு கிளம்பிட்டாரே!” என்று புலம்பினார்கள். அந்தப் பேச்சிலும் “வேறு கட்சிகளில் இருந்து வந்தால் வரவேற்போம். ஆனால், அப்படி வருபவர்களின் வாழ்க்கை முற்றிலும் நேர்மையாக மாறிவிடும். அதற்கு நீங்கள் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.


அரசியலில் இறங்கியபிறகு, கமல்ஹாசனின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துவரும் வள்ளிநாயகம் என்பவர், “பிரபல நடிகரான கமல்ஹாசன், வாகனத்தை சாலையில் நிறுத்தி மைக் பிடித்தால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படத்தான் செய்யும்.

ரசிகர்களோ, வேறு கட்சிகளிலிருந்து வருபவர்களோ, பொதுநலத்தை மட்டுமே மனதில் நிறுத்தி, மக்கள் நீதி மய்யத்தின் அரசியலை முன்னெடுத்துச் செல்வார்கள் என்று அவர் எதிர்பார்ப்பது, இந்தக் காலக்கட்டத்தில் சாத்தியப்படுமா? இதுபோன்ற சிந்தனைகள், யதார்த்தத்தை மீறியதாக அல்லவா இருக்கிறது? தனக்காகக் கூடிய ரசிகர்களுக்காகவோ, மக்களுக்காகவோ பேசாமல், தன்னுடைய பேச்சைக் கண்டுகொள்ளாமல், தனது வாகனத்தைக் கடந்து செல்பவர்கள் மீதல்லவா கரிசனம் காட்டிப் பேசுகிறார். அவ்வளவு நல்லவரா கமல்ஹாசன்? அல்லது, ‘முன்னால் நின்று தன்னைப் பார்க்கும் கூட்டம் எப்படியும் தனக்கு வாக்களித்துவிடும். தன்னைப் பொருட்படுத்தாதவர்களையும் பேச்சினால், செயலினால் கவர்வது மட்டுமே, அரசியலில் நிலைத்து நிற்க உதவும்.’ என்று அரசியல் கணக்கு போடுகிறாரா? தேர்ந்த நடிகர் அவர். கற்ற வித்தையை மக்களிடமே காட்டுகிறாரா?” என்று தனது சந்தேகத்தை முன்வைத்தார்.


கமல்ஹாசனின் தீவிர ரசிகரான கனியோ, “37 வருடங்களுக்கு முன்பே, வித்தியாசமாகத்தான் சிந்தித்தார் தலைவர். பொதுவாக, தங்களின் 100-வது படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று திட்டமிடுவார்கள் பெரிய நடிகர்கள். எல்லா வகையிலும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் கதையாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுவார்கள். தலைவர் அப்படி கிடையாது. பார்வையற்ற கதாபாத்திரத்தை ஏற்று, ராஜபார்வை என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். நல்லதொரு கலைப்படைப்பாக ராஜபார்வை இருக்க வேண்டும் என்பதில்தான் அவருக்கு அக்கறை இருந்தது. தயாரிப்பாளர் என்ற முறையில், வசூலைக் குவிக்கும் கமர்சியல் படமாக அது இருக்க வேண்டும் என்று திட்டமிடவில்லை. 18 வருடங்களுக்கு முன், அவர் தயாரித்து, இயக்கி நடித்த ஹேராமும் கலைப்படம்தான். கல்லா கட்டும் மசாலா படம் கிடையாது. குணா, அன்பே சிவம் என்று தலைவரின் பல படங்களை உதாரணம் காட்ட முடியும். சினிமாவில் மட்டுமல்ல. அரசியலிலும் அதே மாறுபட்ட சிந்தனையோடுதான் களம் இறங்கியிருக்கிறார். நல்லவரா? கெட்டவரா? என்று தலைவர் பேசிய வசனத்தையே, அவருக்கு எதிராக யாரும் ரிபீட் செய்ய வேண்டாம். நல்லதொரு அரசியல் கொள்கையை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் தலைவர் இறங்கியிருக்கிறார். சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.” என்றார்.

‘நம்மவர்’ அரசியலில் ‘நல்லவர்’ என்றால், மக்கள் நிச்சயமாக வரவேற்பார்கள்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT