Skip to main content

விதிகளை மீறி வீடுகளில் பட்டாசு தயாரிக்கிறார்கள்! விபத்தில் சிக்கிய குழந்தைகள்!  

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

 

 

உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனையால், விருதுநகர் மாவட்டத்தில்,  குறிப்பாக சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு ஆலைகளை மூடி போராட்டமெல்லாம் நடந்தது. இதனைத் தொடர்ந்து,  பேரியம் மற்றும் பொட்டாசியம் இல்லாமல் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையாதவாறு பசுமை பட்டாசு உற்பத்தி செய்வதற்கான புதிய பார்முலா வரையறுக்கப்பட்டுள்ளது.  

 

a

 

பட்டாசு உற்பத்தியில் விதிகளைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்பது உரிமம் பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்குத்தான். இதே மாவட்டத்தில் மீனாட்சிபுரம், விஜயகரிசல்குளம், தாயில்பட்டி போன்ற பகுதிகளில்,  வீடுகளில் கள்ளத்தனமாக பட்டாசு தயாரிப்பவர்கள், சட்ட விதிகளுக்கெல்லாம் கட்டுப்பட்டவர்கள் அல்ல. அரசியல் தலையீட்டின் காரணமாக, இவர்கள் மீது எந்தத் துறையும் நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால், இந்தப் பகுதிகளில் விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது. 

 

a

 

சாத்தூர் – தாயில்பட்டியை அடுத்துள்ள கலைஞர் காலனியில் முனியசாமி என்பவரின் வீட்டில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக, வழக்கம்போல் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். இன்று (8-5-2019) மாலை, தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ பற்றி அந்த வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டது. அருகிலுள்ள வீடுகள் மற்றும் தகர செட்டுகளுக்கும் மளமளவென தீ பரவியது. 

 

தகவலறிந்து சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி,  தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில், மூன்று வீடுகள் மற்றும் தகர செட்டுகள் முழுவதுமாக எரிந்துபோயின. அதனால், கலைஞர் காலனியைச் சேர்ந்த தர்ஷினி, கார்த்திகை லட்சுமி, விஜய வர்ஷினி, குருவுத்தாய், குருவம்மாள் என 5 பேர் காயமடைந்து தாயில்பட்டியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

a


வழக்கம்போல், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனும், மற்ற போலீஸ் அதிகாரிகளும் வெடிவிபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டுச் சென்றனர்.  இவ்வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல்நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.  

 

“வீடுகளில் கள்ளத்தனமாகப் பட்டாசு தயாரிப்பது அத்தனை  அதிகாரிகளுக்கும் தெரியும். அபாயகரமான பட்டாசுத் தொழிலைக் குடிசைத் தொழில்போல வீட்டில் வைத்துச் செய்துகொண்டிருக்கும் இந்தப் பகுதி மக்களை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்தும் தைரியம் அதிகாரிகளுக்கு இல்லை. ஏனென்றால், கள்ளத்தனமாகப் பட்டாசு தயாரிப்பவர்களை வாக்காளர்களாக மட்டுமே பார்க்கின்ற அரசியல்வாதிகள், நடவடிக்கை எடுக்க விடுவதில்லை.” என்கிறார்கள் சிவகாசி பட்டாசு உற்பத்தி யாளர்கள்.

இதில் கொடுமை என்ன தெரியுமா? இந்த விபத்தில் காயமடைந்த ஐந்து பேரில் குழந்தைகள் இருவர் என்பதுதான்!
 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.