ADVERTISEMENT

“இரும்பு எச்சங்கள் கிடைத்திருப்பதில் தொல்நடைக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது”- தொல்நடைக்குழு நிறுவனர்

02:47 PM Jan 21, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிவகங்கை தொல்நடைக்குழுவைச் சேர்ந்த க.சரவணன், நாட்டரசன்கோட்டையை அடுத்த முத்தூர் வாணியங்குடியிலிருந்து கௌரிபட்டி விலக்கு சாலையின் வடக்குப் பகுதியில் உள்ள சென்னலக்குடி கசிவு நீர் குட்டையின் புறகரைவரை மண்ஓடுகள் நிறைந்திருப்பதாக சிவகங்கை தொல்நடைக்குழுவிற்குத் தகவல் தெரிவித்தார். அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராசா, சிவகங்கை தொல் நடைக்குழு தலைவர் நா.சுந்தரராஜன், சிவகங்கை தொல்நடைக்குழு உறுப்பினரும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவி இலக்கிய வடிவு ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா தெரிவித்ததாவது, “இறந்தவர்களை நல்லடக்கம் செய்வது மனித குலத்தின் மாண்பாக இன்றும் இருந்து வருகிறது. ஆதி மனிதர்களிடத்திலும், இறந்தவர்களைப் பாதுகாப்பாக அடக்கம் செய்யும் முறை இருந்து வந்துள்ளது. அவர்களிடத்தில் உடலை அழியாமல் பாதுகாத்தால் மறுமை வாழ்வுக்கு அது உதவும் என்ற நம்பிக்கையும் இருந்துள்ளது. விலங்குகளிடமிருந்து இறந்த மனித உடலைப் பாதுகாக்கும் வண்ணம் 3500 ஆண்டுகளுக்கு முன்னாள் பெருங்கற்களை அடுக்கி கல் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அக்காலம் வரலாற்றில் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.

இவை பல்வேறு இடங்களிலும் ஒரே மாதிரியாக காணப்படுவது வியப்புக்குரியது. கல்வட்டங்களுக்கு உள்ளேயும் தாழிகள் காணப்படுவது உண்டு. இறந்தவர்களின் உடலைப் பெரிய பானை (நெற்குதிர்) போன்ற தாழியில் வைத்தோ அல்லது இறப்புக்கு பிறகான எலும்புகளைப் பாதுகாப்பாக வைக்கவோ இம்மாதிரியான முறைகளை 2000 ஆண்டுகளுக்கு முன்பு பின்பற்றியிருக்கலாம். மேலும், மறுமை வாழ்வு எண்ணத்தின் அடிப்படையில் அவர்களுக்குத் தேவையான பொருட்களையும் உள்வைக்கும் முறை இருந்துள்ளது. சென்னலக்குடி கசிவு நீர் குட்டை புற கரையில் பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மண்ணுக்குள் புதையுண்டு மேற்பகுதி உடைந்து ஓடுகளாகக் காணப்படுகின்றன.

நிலத்தின் மேற்பரப்பில் ஒரு சிதைவுண்ட தாழியில் ஓடுகளோடு இரும்புப் பொருளின் எச்சத் துணுக்குகளும் காணப்படுகின்றன. முத்தூர் வாணியங்குடி சென்னலக்குடி கசிவு நீர் குட்டைப் பகுதியிலிருந்து கௌரிப்பட்டி விலக்கு சாலையின் இருபுறங்களிலும் முதுமக்கள் தாழியின் ஓட்டு எச்சங்களைக் காணமுடிகிறது. கசிவுநீர் குட்டையான இவ்விடமானது நெடுங்காலமாக ஈமக்காடாக இருந்திருக்கலாம். மூன்று பெரிய கற்கள் கல்வட்டத்தின் எச்சமாக இன்றும் காணக் கிடைக்கிறது. மிகவும் சிதைவுற்று இருக்கக்கூடிய இந்த முதுமக்கள் தாழிகள் ஓரிடத்தில் குவியலாகக் காணப்படுவது மிகுந்த சிறப்புக்குரியது.

மேலும், அவ்விடத்தில் இரும்பு பொருட்களின் எச்சம் கிடைத்திருப்பதில் சிவகங்கை தொல்நடைக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. கள ஆய்வில் முதுமக்கள் தாழி ஓட்டுக்கிடையே நில மேற்பரப்பில் கிடைத்த இரும்புப்பொருளின் எச்சத் துணுக்குகளைச் சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஓரிரு நாளில் ஒப்படைக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT