ADVERTISEMENT

மகளிர் கல்லூரியில் தொல்லியல் ஆய்வு மன்றம் தொடக்கம்!

06:38 PM Jan 01, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வரலாறு, தொல்லியல் கல்லூரி மாணவிகள் அறிந்துகொள்ளவும், தொல்லியல்துறை சார்ந்த அறிவை வளப்படுத்தவும், பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும் மதுரை நா.ம.ச.சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியின் தமிழ் மற்றும் வரலாற்றுத்துறை இணைந்து கல்லூரியில் “தொல்லியல் ஆய்வு மன்றம்” தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்குக் கல்லூரித் தலைவர் மாரீஸ்குமார் தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் பாண்டிச்செல்வி அனைவரையும் வரவேற்றார். கல்லூரிச் செயலாளர் கரிக்கோல்ராஜ், கல்லூரித் தாளாளர் ஜெயக்குமார், கல்லூரிப் பொருளாளர் நல்லதம்பி, கல்லுாரி முதல்வர் கார்த்திகா ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, “தமிழகம் முழுவதும் விரிவாக நடந்து வரும் அகழாய்வுகளில் வெளிப்பட்டு வரும் தொன்மைச் சான்றுகள் காரணமாக கல்லூரி மாணவ மாணவியர்களிடம் தொல்லியலைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் தற்போது அதிகரித்து வருகிறது. மாணவிகள் தங்கள் பகுதிகளில் உள்ள நமது பண்பாடு, மருத்துவம், கல்வெட்டுகள், பாரம்பரியச் சின்னங்கள், நாட்டார் வழக்காற்றியல், வாய்மொழி வரலாறு, போன்றவற்றை ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும்” என்றார்.

யானைமலை தமிழி கல்வெட்டு பற்றி ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி பேசினார். வரலாற்றுத் துறைத் தலைவர் பாண்டீஸ்வரி நன்றியுரை ஆற்றினார். தொடர்ந்து கல்லூரியில் தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்க இருப்பதாகக் கல்லூரி முதல்வர் கார்த்திகா ராணி தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT