ADVERTISEMENT

''கூட்டணிக்கு எந்த நேரத்திலும் யார் வேண்டுமானால் வரலாம்''-நயினார் நாகேந்திரன் பேட்டி

07:29 AM Mar 03, 2024 | kalaimohan

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

பாஜக கூட்டணியில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஈரோடு அல்லது திருப்பூர், நாமக்கல், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய நான்கு தொகுதிகளை தமாகா கேட்டுள்ளது. மூன்று தொகுதிகளை கொடுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கூட்டணியில் உள்ள தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு இடத்தை பாஜக ஒதுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ஓபிஎஸ் அணியும், டிடிவி தினகரனின் அமமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்விகள் இருந்தது. இந்நிலையில் சென்னையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,''எங்கள் தலைமையின் உத்தரவின் பேரில் ஜான்பாண்டியனிடம் நானும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும், அகில இந்திய மகளிரணி தலைவி வானதி சீனிவாசனும் நேற்றிலிருந்து கூட்டணி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

காலைஜி.கே.வாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம்.அவருடைய விருப்பத்தை எங்களிடம் சொல்லி இருக்கிறார்கள். ஜான் பாண்டியனும் அவருடைய விருப்பத்தை எங்களிடம் சொல்லி இருக்கிறார். இந்த விருப்பத்தை நாங்கள் கலந்து ஆலோசித்து எங்களுடைய தலைமைக்கு அறிவித்த பிறகு தலைமை முடிவு எடுக்கும். தேர்தல் கூட்டணி என்கின்றபோது கொள்கை அடிப்படையிலான கூட்டணி எதுவுமே கிடையாது. தேர்தலுக்கான கூட்டணி தான். தேர்தல் நேரத்திற்கான கூட்டணி என்பதால் எந்த நேரத்திலும் யார் வேணாலும் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம்''என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT