ADVERTISEMENT

திருச்சி மாவட்ட துணைப் போக்குவரத்து ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை 

11:56 AM Oct 27, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சியில் துணைப் போக்குவரத்து ஆணையராகப் பணிபுரிந்து வருபவர் அழகரசு. இவர் கடந்த இரண்டு வருடமாக திருச்சி பிராட்டியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் துணைப் போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வருகிறார். திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் திருச்சியில் பிராட்டியூர், ஸ்ரீரங்கம், சஞ்சீவி நகர் மற்றும் பறக்கும் படை உட்பட எட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் மற்றும் 14 பகுதி மோட்டார் வாகன அலுவலகங்களும் இவரது கட்டுப்பாட்டில் உள்ளது.

இவர் திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராகப் பணிபுரிந்த காலத்தில் தனது பதவியைத் தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சுமார் 2 கோடிக்கும் மேல் சொத்து குவித்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அவர் மாவட்ட துணைப் போக்குவரத்து ஆணையராக பதவி உயர்வு பெறப்பட்டு திருச்சிக்கு மாறுதலாகி வந்தார். தற்போது மீண்டும் அவர் மீது இதே புகார் எழுந்ததைத் தொடர்ந்து திருச்சி வில்லியம்ஸ் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அழகரசு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 6 மணிக்கு துவங்கிய அதிரடி சோதனையானது தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனையின் போது பல்வேறு சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT