Assistant Director Minerals and Mines Department caught red-handed for taking bribe

திருச்சி கே.கே நகரைச் சேர்ந்தவர் ஆல்பர்ட்.ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பூலான்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் கல்குவாரி அமைக்க அனுமதி வேண்டி கடந்த 2-6-2022 அன்று திருச்சி கனிமம் மற்றும் சுரங்க துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இவரது விண்ணப்பம் முசிறி வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பப்பட்டு கள ஆய்வு செய்து இவரது விண்ணப்பம் மீண்டும் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்துள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து இவரது விண்ணப்பம் வந்து மூன்று மாதங்கள் ஆகியும் உதவி இயக்குநர் அலுவலகத்தில் எந்த நடவடிக்கையும் இல்லாததால், ஆல்பர்ட் நேரில் சென்று உதவி இயக்குநர் ஸ்ரீதரனை கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீதரன், தான் நேரில் வந்து கள ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு கடந்த 7-2-2023 அன்று முசிறி பூலாஞ்சேரி சென்று ஆல்பர்ட்டின் இடத்தை ஆய்வு செய்துள்ளார். ஆய்வு செய்து முடித்தவுடன் “உங்களது ஆவணங்கள் எல்லாம் சரியாக உள்ளது. எனவே எனக்கு நீங்க செய்ய வேண்டியதசெஞ்சா உங்களுக்கு கல்குவாரி அமைக்க அனுமதி கொடுத்திடுவேன்” என்று சொல்லி உள்ளார். அதற்கு ஆல்பர்ட் ஸ்ரீதரனிடம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு உதவி இயக்குநர் ஸ்ரீதரன் “5 லட்ச ரூபாய் எனக்கு கொடுத்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பர்மிட் கிடைக்கறதுக்கு ஏற்பாடு பண்றேன். அதுக்கு அட்வான்சா மூணு லட்ச ரூபாயை வரும் வெள்ளிக்கிழமை என் ஆபீசில் வந்து கொடுத்திடுங்க, ஆர்டர் போட்டு கொடுத்ததுக்கப்புறம் மீதி 2 லட்சத்த குடுங்க” என்று கூறியுள்ளார்.

Advertisment

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆல்பர்ட், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்து டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில்லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பேரில், இன்று 10.2.2023 மதியம் திருச்சிஉதவி இயக்குநர், கனிமம் மற்றும் சுரங்க துறை அலுவலகத்தில் ஆல்பர்ட்டிடம் உதவி இயக்குநர் ஸ்ரீதரன் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோதுகையும் களவுமாகப் பிடிபட்டார்.