ADVERTISEMENT

போலீசார் எனக் கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் நூதன முறையில் பணம் பறிப்பு

11:12 AM Feb 06, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீசார் எனக் கூறி மர்ம நபர்கள் நான்கு பேர், நில தரகர்கள் இருவர் என கூட்டு சேர்ந்து நூதன முறையில் 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பூமா செட்டி (வயது 60). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் நிலம் வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள நில தரகர்களை அணுகியுள்ளார். அதற்கு நில தரகர்கள் அதியமான் கோட்டையில் புறவடை ஜங்ஷன் அருகே நிலம் விற்பனைக்கு இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்று நிலங்களைக் காட்டியுள்ளனர். அந்தப் பகுதியில் ஒரு நிலத்தைப் பார்த்த பூமா செட்டி, அந்த நிலத்தை வாங்க முடிவு செய்தார். மேலும், நிலத்தை கிரயம் செய்யும்போது பணத்தை கொடுப்பதாகக் கூறிவிட்டு ஹைதராபாத்துக்கு திரும்பினார்.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு பூமா செட்டியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட நில தரகர்கள், 4ம் தேதி கிரயம் செய்து கொள்ளலாம் என்றும் 30 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு தர்மபுரிக்கு வருமாறும் கூறியுள்ளனர். இதையடுத்து நில தரகர்கள் சொன்னபடியே பணத்தை எடுத்துக்கொண்டு பூமா செட்டி மற்றும் அவருடைய உறவினர் பூமாசெட்டி பாபு (வயது 52) ஆகியோர் தர்மபுரிக்கு வந்தனர். அவர்களை நில தரகர்கள் இருவர் ஒரு காரில் ஏற்றிக்கொண்டு புறவடை ஜங்ஷன் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு காரில் வந்திறங்கிய மர்ம நபர்கள் நான்கு பேர் தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறியுள்ளனர். பின்னர் அவர்கள், நில தரகர்கள் வந்த காரை சோதனை செய்தனர். அப்போது பூமா செட்டி வைத்திருந்த பெட்டியில் 30 லட்சம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் சமயத்தில் அங்குதான் பணத்தை எடுத்துச் செல்வதாக கூறிய அவர்கள், பூமா செட்டியையும் அவருடன் வந்த பூமா செட்டி பாபுவையும் காரை விட்டு கீழே இறங்கும்படி கூறினர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்ட மர்ம நபர்கள், நில தரகர்களுடன் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூமா செட்டி, இதுகுறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் வந்தவர்கள் போலீசாரே இல்லை என்பதும் நில தரகர்களும், போலி போலீசாரும் கூட்டு சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பூமா செட்டியிடம் தொலைபேசியில் பேசிய நில தரகர்களின் தொலைபேசி எண்ணை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT