ADVERTISEMENT

இடைத்தேர்தல் களத்தில் இறங்கிய மூன்றாவது கட்சியின் குக்கர்

06:16 PM Jan 28, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கி அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவரோடு திமுகவினரும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என கோஷ்டி யுத்தமும்., அதைத் தொடர்ந்து கூட்டணி குழப்பம்; வேட்பாளர் தேர்வு; கட்சி சின்னம் இப்படி பல சிக்கல்களை எதிர்கொண்டு வேட்பாளர் அறிவிப்பு வராத சூழ்நிலையில் தேர்தல் பணிக்குழு மட்டும் அறிவித்து களத்தில் இருப்பதாக அதிமுக காட்டிக் கொண்டாலும் ஒரு சுறுசுறுப்பு எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில் இடைத்தேர்தல் களத்தில் இரண்டாவது கட்சியாக வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணியில் இறங்கியது ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ அந்த கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மக்களிடம் வாக்கு கேட்கும் பணியைத் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் மூன்றாவது கட்சியாக தேர்தல் களத்தில் வாக்கு வேட்டையாடி வருகிறது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அக்கட்சியின் வேட்பாளர் சிவ பிரசாத் 28 ஆம் தேதி காலையிலிருந்து குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஈரோடு கிழக்கு தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆக இந்த இடைத்தேர்தல் களத்தில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கை சின்னத்திலும், அடுத்து தேமுதிகவின் முரசு சின்னம், தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குக்கர் சின்னம் என இந்த மூன்றும் தொகுதிக்குள் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT