ADVERTISEMENT

கூட்டணிக்கும் அடிக்கல் நாட்டிய அமித்ஷா... திரண்ட தமிழக பா.ஜ.க... (படங்கள்)

09:34 PM Nov 21, 2020 | kalaimohan

ADVERTISEMENT

இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்பொழுது (21/11/2021) சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அவரை வரவேற்றனர். முன்னதாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் காணொளிக் காட்சி மூலமாக திருவள்ளூர் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். 61,843 கோடியில் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். அதேபோல் கோவை அவிநாசி சாலையில் 1,620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி ஆற்றில் கதவணை கட்டும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். 309 கோடி மதிப்பில் சென்னை வர்த்தக மையத்தை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 3 திட்டங்கள் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

ADVERTISEMENT


இந்நிகழ்ச்சியில் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் பேசுகையில், மூன்றாவது முறையாக நாங்கள் வெற்றிக்கனியைப் பறிப்போம். தேசிய அளவில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பிரதமர் மோடி ஆற்றலுடன் செயல்பட்டு வளர்க்கிறார். இனி வரும் தேர்தலிலும் பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணி தொடரும் என்பதை இந்தக் கூட்டத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதனையடுத்து பேசிய முதல்வரும் பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதனால் பா.ஜ.க- அ.தி.மு.க கூட்டணிக்கும் இந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.


பின்னர், பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, நான் இங்கு சென்னைக்கு வந்திருக்கிறேன். அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். 10 ஆண்டுகள் நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தீர்கள், நீங்கள் இதுவரை தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறீர்கள், எனப் பட்டியலிடுங்கள். எங்கள் தரப்பில் நான் மிகவும் பணிவோடு நாற்சந்தியில் நின்றுகொண்டு பட்டியல் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா? பல நாட்களுக்குப் பிறகு சென்னை வந்திருக்கிறேன் எனவே அரசியல் பேசவும் விரும்புகிறேன். வாரிசு அரசியலைப் படிப்படியாக பா.ஜ.க ஒழித்து வருகிறது. தமிழகத்திலும் அதைச் செய்வோம். ஊழலைப் பற்றிப் பேசத் திமுகவிற்கு என்ன அருகதை இருக்கிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT