ADVERTISEMENT

சென்னையில் மின்னிய கடல் அலைகள்! – கெட்ட செய்திக்கான அறிகுறியா?

04:01 PM Aug 19, 2019 | kirubahar@nakk…

சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் மற்றும் பெசண்ட் நகரிலுள்ள இலியாட்ஸ் கடற்கரைப் பகுதிகளில், ஆகஸ்ட் 18-ந்தேதி இரவு வழக்கத்தைவிட கூட்டம் அதிகமானது. கடல் அலைகளில் நீலநிறத்தில் ஏதோ வித்தியாசமான ஒன்று மின்னுவதைக் காணவே இந்தளவு கூட்டம் கூடியிருக்கிறது. என்ன காரணத்திற்காக கடல் அலைகள் இப்படி மின்னுகின்றன என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை எனினும், வியப்புடன் இதனைக் கண்டு ரசித்துச் சென்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடல் மின்னுதல் என்று சொல்லப்படும் இந்த நிகழ்வுக்குப் பின்னால் இருப்பது, நாக்டிலூக்கா ஆல்கா எனப்படும் ஒருவகை பாசியினம். இந்த ஆல்காக்கள் இயல்பை இழக்கும்போது இதுபோன்ற வண்ணங்களை வெளியிட்டு மின்னுவது வழக்கம். இவற்றில் இருக்கும் லூசிஃபெரன்ஸ் எனப்படும் என்சைம்கள், ஆக்சிஜனோடு வினைபுரிந்து வெளிச்சத்தை ஏற்படுத்துகின்றன. இப்படிப்பட்ட உயிரி வெளிச்ச நிகழ்வுகள் மின்மினி போன்ற சில பூச்சியினங்களில் நடப்பதை நாமே பலமுறை பார்த்திருப்போம். ஆனால், அவற்றைப் போலவே நாக்டிலூக்கா ஆல்காக்கள் மின்னுவதை இயல்பான நிகழ்வாக கருதமுடியாது.

மிக அழகான இந்த நிகழ்வுக்குப் பின்னால் மிகஆபத்தான செய்தி ஒளிந்திருக்கிறது. நாக்டிலூக்கா போன்ற ஆல்காக்கள் அளவுக்கதிகமாக கடல்வாழ் பாசியினங்களை அழிக்கக்கூடியவை. இதனால், கடல்சார் உணவுச்சங்கிலி சிதைந்து போகும் வாய்ப்புள்ளது. இந்த ஆல்காக்கள் அதிகளவு அம்மோனியா வாயுவை வெளியிடுவதால், மீன்கள் இறப்பதற்கும் காரணமாகின்றன. மேலும், கடல்பரப்பில் மாசினையும் இவை ஏற்படுத்த வல்லவை.

ஆல்காக்கள் தொடர்பான ஒரு ஆய்வறிக்கை, நாக்டிலூக்கா ஆல்காக்கள் வழக்கத்தைவிட அளவில் அதிகமாவதால் புவி வெப்பமயமாதல் துரித நிகழ்வாக மாறும் என்கிறது. அதேபோல், சென்ற ஆண்டு வெளியான ஒரு அறிக்கையில், மும்பையின் கடற்பரப்பில் இதுபோன்ற வண்ண ஒளிகள் மின்னியதற்கு இந்த ஆல்காக்களே காரணமென்றும், அரபிக்கடலின் மேற்பரப்பு வெப்பமடைந்ததும், ஊட்டச்சத்து இணைப்பு துண்டித்துப் போனதும் இந்தவகை ஆல்காக்கள் அதிகரித்ததே காரணமென்று சொல்லப்பட்டுள்ளது.

இதுபோன்ற உயிரி வெளிச்ச நிகழ்வுகள் முழுமையாக புரிந்துகொள்ளப்படாத, புரியாத புதிராகவே இருக்கின்றன என்றாலும், லேசாக இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

2000-ஆம் ஆண்டுகளில் இருந்து இதுமாதிரி நிகழ்வுகள் அரபிக்கடலில் பலமுறை நடந்திருக்கின்றன. கோவா, மும்பை மற்றும் கேரளாவின் கழிமுகங்களிலும் இந்த கடல் வெளிச்ச நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘கும்பளாங்கி நைட்ஸ்’ என்ற மலையாளப் படத்திலும் இந்த ஆல்காக்கள் மின்னுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT