ADVERTISEMENT

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

11:18 PM Apr 16, 2024 | kalaimohan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

ADVERTISEMENT

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT