ADVERTISEMENT

பெண்கள் புகார் செய்வதற்கு செல்போன் நம்பர்களை விளம்பரப்படுத்தக் கோரி வழக்கு!

10:46 PM Apr 18, 2020 | Anonymous (not verified)

ஊரடங்கினால் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பாதிக்கப்படும் பெண்கள் புகார் செய்வதற்கு வசதியாக, பாதுகாப்பு அலுவலர்களின் செல்போன் நம்பரை விளம்பரம் செய்யவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT


ADVERTISEMENT

வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் ,"கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படுபவர்கள் நிவாரணம் தேடி குற்றவியல் நடுவர்களை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பல பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக பல அறிக்கைகள் வெளிவருகின்றன. ஊரடங்கினால், கணவன், மனைவி வீட்டிலேயே அதிக நேரம் இருப்பதால், குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தேசிய பெண்கள் ஆணைய அறிக்கையின்படி ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, இதுவரை 257 புகார்கள் வந்துள்ளன. அதில், 69 புகார்கள் குடும்ப வன்முறை தொடர்பானது ஆகும். தமிழகத்தில் 31 மாவட்டங்களில் உள்ள 24 குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆன்லைன் மூலம் 7 மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளை மட்டுமே அணுக முடிகிறது. 24 பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதால், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குடும்ப வன்முறை புகார்களை விசாரிக்க வேண்டும் என்று அவசர உத்தரவுகள் எதையும் அரசு பிறப்பிக்கவில்லை.
குடும்ப வன்முறைச் சம்பவங்களால் மன அழுத்தத்தில் உள்ள பெண்களை வீட்டில் இருந்து அழைத்துவர அரசு வாகனங்களை பயன்படுத்த முடியாது என்றும் கூறுகின்றனர்.

குடும்ப வன்முறை சம்பவங்களில் பெண்களுக்கு உதவும் விதமாக எந்த நடவடிக்கையும் அரசுத் தரப்பில் இருந்து எடுப்பது இல்லை. உத்தரபிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இணையத்தில் வழக்கு தாக்கல் செய்யவும், மாவட்ட அளவில் காணொலிக் காட்சி மூலம் புகார்களை விசாரிக்கவும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் புகார் தெரிவிக்க வசதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பாதுகாப்பு அலுவலர்களின் செல்போன் எண்களை பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அரசு விளம்பரப்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் சமூக பணியாளர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கிற்கு, தமிழக அரசு ஏப்ரல் 23-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT