ADVERTISEMENT

தத்துக் கொடுத்த தாயே மீண்டும் பெற்றார்; தத்தெடுத்த தம்பதியர் குழந்தையைப் பிரிய மனமின்றி கண்ணீர் சிந்தினர்!

11:46 AM Apr 19, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சமுத்திரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. கட்டடத் தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. கணவரின் வருமானம் போதாததால் பிரேமாவும் பூக்கட்டும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

இது ஒருபுறம் இருக்க, அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் உறவினரான அரியாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் - கனகரத்தினம் தம்பதியினர் திருமணமாகி 25 ஆண்டுகள் கடந்தும் குழந்தை பிறக்காததால், குழந்தையைத் தத்தெடுக்கும் முடிவில் இருந்தனர். இந்த நிலையில் பிரேமா மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்ததால், அதன் மூலம் பிறக்கும் குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ள கண்ணன் மூலமாக சீனிவாசன் தம்பதியினர் முயன்றனர். இதற்கிடையே பிரேமாவுக்கு கடந்த மார்ச் மாதம் மூன்றாவதாகவும் பெண் குழந்தையே பிறந்தது. அந்தக் குழந்தையை சீனிவாசன் தம்பதியினர் முறைப்படி தத்தெடுத்தனர்.

ஒருபுறம் வறுமை மற்றொரு புறம் மூன்றும் பெண் குழந்தைகள் என்ற நிலை இருந்தாலும் குழந்தையைப் பிரிந்து பிரேமாவால் இருக்க முடியவில்லை. தனது குழந்தையை மீண்டும் தன்னிடமே வாங்கிக் கொடுத்து விடுமாறு கணவரிடம் நாள்தோறும் கேட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர்கள் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமாரிடம் முறையிட்டனர். அதன்பேரில் ராஜ்குமார், தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். உடனடியாக காவல்துறையினர், குழந்தையைத் தத்தெடுத்த தம்பதியினரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர். பெற்ற தாயின் தவிப்பை விளக்கிக் கூறினர். இதனால், வேறு வழியின்றி சீனிவாசனும் அவருடைய மனைவி கனகரத்தினமும் குழந்தையை மீண்டும் பிரேமாவிடமே கொடுத்தனர்.

குழந்தையை மீளவும் பெற்றுக்கொண்டதால் பிரேமா மகிழ்ச்சியில் குழந்தையைக் கொஞ்சினார். அதே நேரம், தத்தெடுப்பின் மூலம் 25 ஆண்டுக்கால ஏக்கம் தீர்ந்தது என்ற சந்தோஷத்தில் கடந்த ஒரு மாதமாக பெண் குழந்தையை சீராட்டி பாராட்டி வளர்த்து வந்த சீனிவாசன் தம்பதியினர் குழந்தையைப் பிரிய மனமின்றி கண்ணீர் சிந்தியது காவல்துறையினரின் மனங்களையும் கனக்கச் செய்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT