ADVERTISEMENT

கூட்டணி கட்சிக்கு எதிராக காய் நகர்த்தும் ஆளும் கட்சி ஒன்றிய செயலாளர்...!

10:45 AM Jan 11, 2020 | Anonymous (not verified)

கடலூர் மாவட்ட அ.தி.மு.கவின் மேற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவன். இவரது சொந்த தொகுதி திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்த தொகுதிக்குட்பட்ட நல்லூர் ஒன்றிய குழு தலைவராக கடந்த 2011 - 2016 வரை நல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரனின் மனைவி ராஜலட்சுமி ராஜேந்திரன் சேர்மனாக பதவி வகித்து வந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



இந்நிலையில் தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் நல்லூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 21 ஒன்றிய கவுன்சிலர்களில் அ.தி.மு.க 7, பா.ம.க 2, சுயேட்சை 2, என அ.தி.மு.க அணியில் 11 பேரும், தி.மு.க 7, சுயேட்சை 1 என 8 பேர் திமுக அணியில் இருக்கிறார்கள். மேலும் அ.ம.மு.க ஒருவர் எந்த பக்கமும் செல்லாமல் இருக்கிறார்.

தி.மு.க. சார்பில் சேர்மேன் வேட்பாளராகக்கூடிய ஒன்றிய செயலாளரும், முன்னாள் சேர்மனுமான பாவாடை கோவிந்தசாமி என்பவர் அ.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் பச்சமுத்துவிடம் தோல்வியடைந்து விட்டார். அதனால் சேர்மேன் பதவியை பிடிக்க தி.மு.க ஆர்வம் காட்டவில்லை. ஆளும் கட்சியில் தனது சமுதாயத்தை சேர்ந்த ராஜலட்சுமி ராஜேந்திரன் சேர்மனாக ஆனால் பிரச்சினை இல்லை என்றும், அவரது பகுதியில் தி.மு.கவில் புதிதாக சேர்மேன் என ஒருவர் வலம் வருவதை விரும்பாமலும் அமைதி காத்து வருகிறார் தி.மு.க ஒன்றிய செயலாளர்.

அதேசமயம் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தன்னுடன் ஒரு சுயேட்சை கவுன்சிலரை வைத்திருந்தார். ஆனால் அ.தி.மு.க கூட்டணியில் நல்லூர் ஒன்றிய சேர்மன் பதவி பா.ம.கவுக்கு ஒதுக்கியிருப்பதாக வெளியான தகவலால் விரக்தியடைந்தார்.



ஆனாலும் கட்சி தனக்கு சேர்மன் வாய்ப்பு தரவில்லை என்றால் நான் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெறுவேன். எனக்கு தி.மு.க.வினர் ஆதரவளிப்பார்கள் என்று ராஜேந்திரன் தனது சகாக்களிடம் உளறியிருக்கிறார். மேலும் தன்னுடன் இருந்த சுயேட்சை கவுன்சிலரையும் ராஜேந்திரன் வெளியே அனுப்பி இருக்கிறார். இதனை கேள்விப்பட்ட அதிமுகவினர் ராஜேந்திரனிடம், ‘ஏன் சுயேட்சையை வெளியே அனுப்பி வைத்தீர்கள்…?’ என்று கேட்டுள்ளனர். அதற்கு ராஜேந்திரன், ‘எனக்குன்னா ஓட்டு போடுவார்கள். பா.ம.கவுக்குன்னா எப்படி ஓட்டு போடுவார்கள்..? என்று கூறியிருக்கிறார்.

இந்த ராஜேந்திரன் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கூட இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க, அமமுக, சுயேட்சைகள் என அனைவரையும் வாபஸ் வாங்க வைத்து அன்னப்போஸ்ட்டாக வெற்றி பெற்றவர். தி.மு.கவில் சீட்டு கிடைக்காமல் சுயேட்சையாக போட்டியிட்ட பலருக்கும் தலா 5 லட்சம் தேர்தல் செலவுக்கு கொடுத்திருக்கிறார். மொத்தமாக இந்த தேர்தலில் மட்டுமே ஒன்றரை கோடிக்கு மேல் செலவுகள் செய்துள்ளார்.

இவருக்கு ஆதரவாக 3 சுயேட்சை மற்றும் அமமுக ஒருவர் என 4 பேர், அவரது ஓட்டு என ஐந்து ஓட்டுக்கள் இருக்கிறது. அதிமுகவில் ஒருவரும், திமுகவில் மூவரும் ஓட்டுப்போடுவார்கள். மொத்தம் 9 பேர் தன் பக்கம் இருப்பதால் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்து வெற்றி பெற்று விடுவேன் என்று ரகசியமாக காய் நகர்த்தி வருகிறாராம் ராஜேந்திரன்.

இதனை அறிந்த பா.ம.க.வினர் இது குறித்து அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு செல்ல அவரும் மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவனிடம் விசாரிக்க அவரும் ராஜேந்திரனை எச்சரித்துள்ளார். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுத்து எப்படியும் நல்லூரில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு சேர்மன் வெற்றி உறுதி என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

ஆனாலும் ராஜேந்திரன் கணக்கு வேறு மாதிரியாக உள்ளது. ஆக மொத்தம் அ.தி.மு.க ஒன்றிய செயலாளரே கூட்டணி கட்சியை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளார். வெல்வது கட்சிகள் கூட்டணியா… கரண்சி கூட்டணியா… என்பது விரைவில் தெரியும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT