ADVERTISEMENT

பணம் கொடுக்க முயன்ற அ.தி.மு.கவினர்!  11 லட்சம் பணத்தை போட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள்! 

01:32 PM Apr 04, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. கடலூர் மாவட்டத்திலும், களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் தத்தமது சின்னங்களுக்கு வாக்குச் சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆங்காங்கே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முறைகேடுகள் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட கரும்பூர் கிராமத்தில் அ.தி.மு.கவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு பெற முயல்வதாக பறக்கும் படை அலுவலர், ருக்குமணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கரும்பூர் கிராமத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருப்பதை உறுதி செய்தனர். அதையடுத்து பணம் விநியோகம் செய்த நபரை பிடித்து தீவிர விசாரணை செய்ததில், அவர் பண்ருட்டி அருகே உள்ள வடலூர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ராஜாராம் என்பது தெரியவந்துள்ளது. மேலும், பண்ருட்டி அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுப் போடுவதற்காக பணம் கொடுத்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் ருக்குமணி புகார் செய்தார். பின்னர் ராஜாராமிடமிருந்து 40,500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து பண்ருட்டி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் அலுவலர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் விருத்தாசலம் பகுதியில், நேற்று இரவு தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் வேல்முருகன், பறக்கும்படை நிலை அலுவலர் லெனின் உள்ளிட்டவர்கள் துணை ராணுவ படையினருடன் விருத்தாசலம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது வி.என்.ஆர். நகர் பகுதியில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஸ்கூட்டியில் வேகமாகச் சென்றார். பறக்கும் படையினர் அவரை மறித்து சோதனை செய்தனர். அப்போது ஸ்கூட்டி டிக்கியை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் யார் என விசாரிப்பதற்குள் ஸ்கூட்டியை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு அவர் தப்பிவிட்டார். இதையடுத்து வண்டியைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வண்டியை கொண்டு சென்று மொபெட்டின் சீட்டை உடைத்து பார்த்தபோது அதில் 52 பாக்கெட்டுகளில் பணக்கட்டுகள் இருந்து தெரியவந்தது. தொடர்ந்து அவற்றை எண்ணி பார்த்தபோது அதில் 100 நோட்டுகள் கொண்ட 500 ரூபாய் கட்டு 17, நூறு நோட்டுகள் கொண்ட 200 ரூபாய் 19 கட்டுகள், 100 ரூபாய் நோட்டுகள் கொண்ட 16 கட்டுகள் இருந்தன. ஆக மொத்தம் 13,99,000 ஆயிரம் ரூபாய் அதில் இருந்தது. பணத்தை பறிமுதல் செய்து விருத்தாசலம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பணத்தை கொண்டு வந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சிதம்பரம் தனி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட எஸ்.புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வாழை தோட்டம் அருகே இளைஞர்கள் சிலர் நின்றிருந்தனர். பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய உடனே அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது பாலிதீன் கவரில் பணம் கீழே கிடந்தது அதனை பறிமுதல் செய்து எண்ணிப் பார்த்தபோது அதில் 11,38,000 இருந்துள்ளது. அதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் குறிஞ்சிப்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

ஒவ்வொரு பகுதியிலும் பணப்பட்டுவாடா நடைபெறுவதால் அதிகாரிகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT